அடுத்த குறி முதல்வரின் உறவுகள்? அதிரடி ஆட்டம் காட்டும் அமலாக்கத்துறை…ஆ. ராசா சொத்து முடக்கத்தின் பின்னணி!
தேர்தல் நெருங்குவதால் அரசியல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான ஆ. ராசாவின் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக கையப்படுத்தி இருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திமுகவுக்கு செக் வைக்கும் வகையில், அடுத்ததாக அதன் வாரிசுகளுக்கும் குறி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில், அமலாக்கத்துறையின் அதிரடி நடவடிக்கைகளுக்கு வி.ஐ.பி. அரசியல்வாதிகள் பலரும் சிக்கி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில், பவர்ஃபுல் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை வளையத்தில் சிக்கி, கைதாகி இப்போது சிறையில் கம்பி எண்ணுகிறார். அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த போக்குவரத்துத் துறை தொடர்பான மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார் செந்தில் பாலாஜி.
இதேபோல், அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை மேற்கொண்டது. சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடியையும், அவருடைய மகனும் கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்பி-யுமான கௌதம சிகாமணியையும், அமலாக்கத்துறை கடந்த ஜூலை மாதம் விசாரணை செய்தது.

அதை தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சரும் அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் சிக்கினார். ரயில்வே ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனைகளில் ரொக்கமும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் மாறிமாறி திமுக புள்ளிகளை குறிவைத்து சோதனை நடத்தி வருவதன் மூலம், திமுக கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில்தான் முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி தொகுதி எம்பியுமான ஆண்டி முத்து ராசாவின் பினாமி பெயரில் உள்ள அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை தற்போது கையகப்படுத்தி பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
கடந்த 2004-ம் ஆண்டு முதல், 2007 வரை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஆ. ராசா, ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் ஒப்புதல் அளிப்பதில் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்தது. வழக்கு விசாரணையின்போது, சுற்றுச்சூழல் ஒப்புதல் அளிப்பதற்கு ரியல் எஸ்டேட் நிறுவனம் பணம் கைமாறு செய்ததாகவும், 2007-ம் ஆண்டில் ஆ.ராசாவின் உறவினரின் பெயரில் தொடங்கப்பட்ட கோவை ஷெல்டர் புரமோட்டார்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் பணம் பெற்றதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.
கடந்த 2007-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், எந்தவொரு வணிக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதில்லை என்றும், அதனிடம் இருந்து பெற்ற பணத்தில் கோவை சொத்துகளை வாங்கியதாகவும் கூறி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், அசையா சொத்துக்களாக வைத்துள்ள ரூ.55 கோடி சந்தை மதிப்புள்ள 45 ஏக்கர் நிலங்களை, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டம் 2002-ன் கீழ் அமலாக்கத் துறை தற்காலிகமாக முடக்கியது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஆ. ராசாவின் பினாமி பெயரில் உள்ள அந்த சொத்துக்களை நிரந்தரமாக முடக்கி இருக்கிறது அமலாக்கத்துறை.
இதுதொடர்பாக அமலாக்கத்துறை தனது சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‛ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் கையகப்படுத்தியுள்ளன. இந்த சொத்துகள் அவரது பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் இருக்கிறது. ஆ ராசா மீதான சொத்து குவிப்பு வழக்கின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனது அரசியல் எதிரியான திமுகவை பலவீனப்படுத்தும் வேலைகளில் பாஜக தீவிரம் காட்டி வருவதாகவும், அதற்காக புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள் திமுக தரப்பில் எரிச்சலையும் கவலையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
அண்மையில் அமைச்சர் உதயநிதியின் சனாதனம் தொடர்பான பேச்சு சர்ச்சையாக்கப்பட்டது. அதன் மூலம் திமுகவை பிற கட்சிகளிடமிருந்து அந்நியப்படுத்தும் வேலையை பாஜக பார்க்கத்தொடங்கியது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் திமுக மீது மேலும் சில அழுத்தங்களை கொடுக்க திட்டமிட்டுள்ளது பாஜக. அதன் வெளிப்பாடாகவே தற்போது நடைபெறும் ரெய்டு என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
இந்தியா கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கும் திமுகவையும் அதன் தலைமையையும் அட்டாக் செய்யும் வகையிலேயே பாஜக அரசின் சமீபத்திய மூவ்கள் உள்ளன. இதன் கிளைமாக்ஸ் ஆக, தேர்தல் நெருங்கும் தருணத்தில் திமுகவுக்கு பேரதிர்ச்சி தரும் வகையில் பெரிய சம்பவம் ஒன்றை நிகழ்த்த, பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதாவது, முதல்வரின் நெருங்கிய உறவினர்கள், முதல்வரின் வாரிசு வீட்டில் கைவைக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உதயநிதிக்கு குறி வைத்தால், அது அரசியலில் அவரது வளர்ச்சியை மேலும் வலுவாக்கிவிடும் என்பதால், மருமகன் சபரீசன் மீது பார்வை திரும்பி இருப்பதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
திமுகவின் மூளையாக செயல்படுகிறார் சபரீசன். அவரை அடக்கி வைத்தால், அது திமுகவுக்கு பலத்த அடியாக இருக்கும் என்று கருதி, அவரது ஆடிட்டருக்கு செக் வைத்துள்ளனர். அதன் ஒருபகுதியாகவே மணல் குவாரிகள், ஒப்பந்ததாரர்கள், கனிமவளத்துறை அலுவலகம், ஆடிட்டர்கள் வீடு என அமலாக்கத்துறை தனது வலையை அகலமாக விரித்தது. ஏற்கனவே, சபரீசனின் ஆடிட்டர் சண்முகராஜ் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் ஏப்ரல் மாதம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய மணல் குவாரி ரெய்டுகளில் சபரீசனை சிக்க வைக்கும் வகையில் ஆவணங்கள் உள்ளதாக என்று சல்லடை போட்டு தேடி வரும் புலனாய்வு அமைப்புகள், விரைவில் அடுத்த அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாகவே, பழைய வழக்குகளில் ஆ. ராசாவின் சொத்துக்களை முடக்கி, திமுகவுக்கு எச்சரிக்கை மணியை அமலாக்கத்துறை அடித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
கூட்டணி, தேர்தல் தேதி அறிவிப்பு என தேர்தல் களம் சூடுபிடிக்கும் தருணத்தில் திமுக தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் காத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பல சோதனைகளையும், சவால்களையும் எதிர்கொண்டு வளர்ந்த திமுக, தற்போது கருணாநிதி இல்லாத சூழலில் இதையெல்லாம் எளிதாகக் கடந்துவிடும் என்று உடன்பிறப்புகள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





