தந்தையே தனது மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம்!
விருதுநகர் மாவட்டத்தில் சொத்துச் சண்டையில் மனைவி தலையிட்டு பிரச்சனையை ஏற்படுத்துவதால் மூன்று குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள கணவன் முயற்சி செய்துள்ளான். இதில் ஒரு குழந்தை துரதிஸ்டவசமாக உயிரிழந்துள்ளது. தவறு யார் மீது?
விருதுநகர் மாவட்டம் நாராயண புரத்தை சேர்ந்தவர் 37 வயதான சிவமணி. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி ராமலட்சுமி. சிவகாசி தீயணைப்பு நிலையத்தில் உதவியாளராகவும் பணி புரிந்து வருகின்றனர். 9 வயது விஜயலட்சுமி ,8 வயது சிவரஞ்சினி, மூன்று வயது சிவ பிரசாத் ஆகியோர் இந்த தம்பதியின் குழந்தைகள்.
வியாழக்கிழமை காலை ராமலட்சுமி வழக்கம்போல பள்ளிக்கு சென்று விட கணவன் சிவமணி குழந்தைகளோடு வீட்டில் இருந்துள்ளார். மாலை 4 மணி அளவில் பணி முடிந்து ராமலக்ஷ்மி வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது உறவினர் ஒருவர் செல்போனில் அழைத்து சிவமணி விஷம் அருந்தி விட்டதாக தெரிவித்தார்.
பதறிப்போய் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு சிவமணியும் மூன்று குழந்தைகளும் விஷம் அருந்திய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். அவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் சிகிச்சை பலனின்றி 8 வயது சிறுமி உயிரிழந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சிவமணியின் தந்தைக்கு கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் இருப்பது தெரியவந்தது.
அந்த நிலத்தை சகோதரிகள் 3 பேர் சிவமணியின் தாய் மற்றும் சிவமணி என ஐந்து பாகங்களாக பிரித்து அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. இதில் சிவமணியின் தாய்க்கான நில பங்கையும் சேர்த்து தங்களுக்கு வாங்கும்படி சிவமணியின் மனைவி ராமலட்சுமி வலியுறுத்தி வந்துள்ளார். இதுதொடர்பாக தம்பதியிடையே அடிக்கடி தகராறுகள் நடைபெற்றுள்ளன.
சிவமணி மது அருந்திவிட்டு சண்டை போட்டு வந்துள்ளார். இந்த நிலையில்தான் வியாழக்கிழமை மதுபோதையில் குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். குழந்தைகளுக்கு விஷம் கொடுத்ததோடு நிற்காமல் அவர்களை கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றுள்ளார்.
சிவமணி மேலும் தான் விஷமருந்தி சாகாமல் இருந்ததால் தனது மணிக்கட்டு மற்றும் கால்களில் பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். சிவமணி மீது கொலை வழக்கு பதிவு செய்த சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் சிகிச்சை முடிந்த பிறகு அவரிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.






