--- --:--:-- --

கிளறப்படும் குப்பை பிரச்சினை.. * தினேஷ்குமாருக்கு தேர்தலில் புதிய தலைவலி.. * முதலிபாளையம் விவகாரத்தில் அரசியல் சதி?

IMG-20260404-WA0920

திருப்பூர் என்றாலே பின்னலாடைத் தொழில்தான் நினைவுக்கு வரும். ஆனால், திருப்பூரின் அடையாளத்தையே ஒரு மலைபோலக் குவிந்து கிடக்கும் குப்பைகள் மாற்றிக் கொண்டிருக்கின்றன. வரும் சட்டமன்றத் தேர்தலில் திருப்பூர் தெற்கு தொகுதி, தமிழகத்தின் உற்றுநோக்கப்படும் தொகுதியாக மாறியிருக்கிறது. அதற்குக் காரணம் அரசியல் கணக்குகள் மட்டுமல்ல; முதலிபாளையம் மக்களின் ‘குப்பை’ யுத்தமும்தான்.

 

திருப்பூர் மாநகராட்சியின் மேயராக இருந்த தினேஷ்குமார், இப்போது தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுக வேட்பாளராகத் தெற்குத் தொகுதியில் களம் காண்கிறார். ஆனால், அவர் இறங்கியுள்ள களம் பூக்களால் ஆனதல்ல; முதலிபாளையம் மக்களின் குமுறல்களால் ஆனது.

 

புகையும் குப்பை பிரச்சினை!

முதலிபாளையம் பகுதி மக்கள்
 முதலிபாளையம் பகுதி மக்கள்

திருப்பூர் மாநகரத்தின் ஒட்டுமொத்தக் கழிவுகளும் முதலிபாளையம் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட பாறைக்குழிகளில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அந்தப் பகுதியே ஒரு நரகமாக மாறியுள்ளது என்பதுதான் கசப்பான உண்மை. நிலத்தடி நீர் முற்றிலும் மாசடைந்து, குடிநீர் விஷமாகி, துர்நாற்றத்தால் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

“நாங்க என்ன பாவம் செய்தோம்?” என்று கேட்கும் அந்த மக்களின் போராட்டங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் செவிசாய்க்கவில்லை. இறுதியில் நீதிமன்றக் கதவுகளைத் தட்டிய மக்களுக்கு, குப்பை கொட்டத் தடையாணை கிடைத்துள்ளது. ஆனால், இதுவரை கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்படாமல் மலையாகக் காட்சியளிப்பதுதான் வேதனை.

 

ஓட்டு எனக்கு வேணாம் என்றாரா தினேஷ்?

 

முதலிபாளையம் குப்பை பிரச்சினையைத் தீர்க்க என்ன செய்தீர்கள் என்று மக்கள் கேட்டபோது, மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகளை தினேஷ்குமார் விளக்கியுள்ளார். ஆனால், சமாதானம் அடையாத மக்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஒரு கட்டத்தில் “உங்களுடைய ஓட்டெல்லாம் எனக்குத் தேவையில்லை” என்று அவர் ஆவேசப்பட்டதாக ஒரு பேச்சு உள்ளது.

 

 

400 மனுக்கள்… அதிர வைக்கும் ‘சுயேச்சை’ ஆயுதம்!

 

இந்த ஒரு வார்த்தை, எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போலாகிவிட்டது என்று அப்பகுதி மக்கள் குமுறுகின்றனர். “எங்கள் ஓட்டு வேண்டாம் என்பவருக்கு எங்கள் பாடம் எப்படி இருக்கும் என்று காட்டுகிறோம்” என ஒரு தரப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

 

சொன்னதோடு நிற்காமல், தினேஷ்குமாருக்கு எதிராக முதலிபாளையம் பகுதியைச் சேர்ந்த சுமார் 400 பேர் சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்யப்போவதாக அறிவித்தனர். மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு வாங்குவதற்காக 200-க்கும் மேற்பட்டோர் திரண்டது போலீஸாரையே திணற வைத்துவிட்டது. ஒரே தொகுதியில் இத்தனை வேட்பாளர்கள் களம் இறங்குவது, ஆளுங்கட்சி வேட்பாளருக்குப் பெரும் தலைவலியை உண்டாக்கி உள்ளது.

மக்கள் சொல்வதென்ன?

 

இந்த விவகாரம் குறித்து முதலிபாளையம் பகுதி மக்கள் கூறுகையில், ” “முன்னாள் மேயர் தினேஷ்குமார் போட்டியிடும் திருப்பூர் தெற்கில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளோம். இந்தியாவில், திடக்கழிவு மேலாண்மையில் திருப்பூரை நெம்பர் 1 மாநகராட்சி ஆக்கிக் காட்டுவேன் என்று சொன்னவர் தினேஷ்குமார். எங்கேயாவது குப்பை கிடந்தால் பரிசு தருவதாகவும் அவர் சொல்லியிருந்தார்.

 

முதலிபாளையத்தில் குப்பை கொட்ட நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது எங்களின் வாக்குகளே வேண்டாம் என்றவர் அவர். எங்களை உதாசீனப்படுத்திய தினேஷ்குமாருக்குப் பாடம் புகட்டவே, தேர்தலில் போட்டியிடுகிறோம். தனிப்பட்ட முறையில் நாங்கள் எந்தக் கட்சிக்கும் எந்த நபருக்கும் எதிராகக் களமிறங்கவில்லை. ஆனால் எங்கள் பிரச்சினை உலகிற்குத் தெரிய வேண்டும்; அதற்குத் தீர்வு வேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறோம். முதலிபாளையத்தை மாசுபட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்; மருத்துவம், தரமான குடிநீர் வசதிகள் எங்களுக்கு வேண்டும்” என்றனர்.

 

அரசியல் சதி vs மக்கள் போராட்டம்

 

மறுபுறம், தினேஷ்குமார் தரப்பு ஆதரவாளர்களோ இதைப் பின்னணியில் இருந்து யாரோ இயக்குவதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். “அரசியல் ரீதியாக அவரை எதிர்கொள்ள முடியாதவர்கள், மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு இப்படி ஒரு சூழலை உருவாக்குகிறார்கள். இதைத் தனது சாதுர்யத்தால் அவர் கையாள்வார்” என்கிறார்கள் அவர்கள்.

 

ஆனால், இது வெறும் அரசியல் சதிதானா அல்லது ஒரு வாழ்வாதாரப் போராட்டமா? பல ஆண்டுகளாகச் சுகாதாரச் சீர்கேட்டால் தவிக்கும் மக்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை யாராலும் மறுக்க முடியாது. தேர்தல் நேரத்தில் ஒரு தொகுதியின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போவது ‘குப்பை மேலாண்மை’ ஆகவும் இருக்கலாம். இதை தினேஷ்குமார் அறிந்திருப்பார்.

 

திருப்பூர் தெற்கில் இந்த ‘குப்பை’ அரசியல், தினேஷ்குமாரைச் சிம்மாசனத்தில் அமரவைக்குமா அல்லது குப்பைக் குழியில் தள்ளுமா என்பது தேர்தல் முடிவுகள் தெரிவித்துவிடும்.

Leave a Reply

Right Menu Icon