அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 2025-26 ம் ஆண்டின் பள்ளி மேலாண்மை குழுவின் முதல் கூட்டம்!
மாணவிகளுக்கு சுகாதாரமான, அனைத்து வசதிகளுடன்
கூடிய நவீன கழிப்பிட கட்டிடத்தை உடனடியாக கட்டுவது
அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளி மேலாண்மை குழுவின் முதல் கூட்டத்தில் தீர்மானம்.
திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வரும் அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 2025-26 ம் ஆண்டின் பள்ளி மேலாண்மை குழுவின் முதல் கூட்டம் பள்ளி வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு ( எஸ் எம் சி ) தலைவர் ஈஸ்வரி தலைமை தாங்கினார். எஸ்.எம்.சி ஒருங்கிணைப்பாளரும், பள்ளி தலைமை ஆசிரியருமான ராமகிருஷ்ணன் வரவேற்றார்.
கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மேலாண்மை குழு கூட்டப் பொருள் குறித்த வீடியோ காணொளி அனைவருக்கும் ஒளிபரப்பப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளியின் செயல்பாடுகள் குறித்து உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களை எடுத்து கூறினார்கள்.
பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு : பள்ளியில் மாணவிகள் இயற்கை உபாதைகளை கழிக்க குறைவான கழிப்பிடங்களே இருப்பதால் சிறுநீர் கழிக்க செல்லாமல் இருப்பதுடன், மாலை வீடுகளுக்கு சென்று கழிப்பிடம் செலவதால் சிறுநீரக தொற்று ஏற்படும் சூழல் ஏற்படுகிறது. இதனால் பள்ளியில் மாணவிகளுக்கு என தனியாக சுகாதாரமான, அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன கழிப்பிடம் உடனடியாக கட்டுவது. 1 முதல் 7 ஆம் வகுப்பு வரை தரையில் உட்கார்ந்து படித்து வரும் மாணவர்களுக்கு டெஸ்க் பெஞ்ச் உடனடியாக ஏற்பாடு செய்து தருவது. பள்ளியில் அரசு சார்பில் 2 துப்புரவு பணியாளர்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் ஒருவர் மட்டுமே பள்ளிகள் துப்புரவு பணி மேற்கொண்டு வருகிறார்.

இதனால் கூடுதலாக மற்றொரு துப்புரவு தொழிலாளரை நியமனம் செய்ய அரசை வலியுறுத்துவது. போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்துவது. பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லாததால் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை நன்கொடையாளர்கள் மூலம் வெளியிடங்களில் பயிற்சி கொடுத்து அவர்களின் திறமையை வெளிக்கொணர நடவடிக்கை மேற்கொள்வது.
பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை முழுமையாக செயல்படுத்துவது. மாணவர்களின் வாழ்வியல் திறனை மேம்படுத்த சரியான நடவடிக்கை எடுப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் திருமுருகன்பூண்டி நகராட்சி கவுன்சிலர் பாரதி உள்பட எஸ்.எம்.சி உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.





