டெண்டர் முறைகேடு புகார் தொடர்பான இபிஎஸ் வழக்கு இன்று விசாரணை..!
டெண்டர் முறைகேடு புகார் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது அதிகாரத்தை பயன்படுத்தி நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகளை தனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கியதாக லஞ்ச ஒழிப்பு துறையில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி புகார் அளித்திருந்தார்.
இதில் நான்காயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். பின்னர் இது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் நாள் சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தனித்தனியே உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனையடுத்து சிபிஐ விசாரணைக்காக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை 2018ஆம் ஆண்டு அக்டோபர் 28ம் நாளில் இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விரைவாக விசாரிக்க தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் முறையிடப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்க பட்டியலிடப்பட்டுள்ளது.






