திருவாடானையில் மிக குறைந்த எண்ணிக்கையில் பயணிகளுடன் பேருந்துகள் ஒடத் துவங்கியது!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் இருந்து பழனி, மதுரை, காரைக்குடி, திருச்சி, ராமேஸ்வரம், ராமநாதபுரம் மார்க்கமாக ஒரு நாளைக்கு சுமார் 80க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கி வந்தன. தற்பொழுது கொரோனோ வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் அரசு போக்குவரத்து பேருந்துகள் 2 மாதங்களாக இயக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் படிப்படியாக ஒரு சில மாவட்டங்களில் கொரொனா வைரசின் தாக்கம் குறைந்தது.
அதனால் அந்தந்த மாவட்டங்களுக்கு சில தளர்வுகளுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து திருவாடானை பேருந்து நிலையத்திற்கு இன்று காலை பழனி, சிவகங்கை, புதுக்கோட்டை, தொண்டி மற்றும் உள்ளூர் கிராமங்களுக்கு இடையே செல்லும் கிராம பேருந்துகள் இயக்கப்பட்டன.

பேருந்துகள் இயக்கப்படுவது சம்பந்தமாக மக்கள் மத்தியில் போதிய தகவல் இல்லாததால் பழனி பேருந்தில் ஒரு பயணியும், தொண்டி பேரூந்தில் ஒரு பயணியும், என இப்படி ஒன்றிரண்டு பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டது.
முன்னதாக பேருந்துகள் அனைத்தும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பும் ஒட்டப்பட்டுள்ளது. பயணிகள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என நடத்துனர், ஓட்டுநர் தெரிவித்தார்கள். அதன் படி முக கவசம் அணிந்தவர்களை மட்டுமே பேருந்தில் அனுமதித்தனர். ஓட்டுநரும், நடத்துனரும் முக கவசம், கையுறை அணிந்து பணிகளை செய்தனர்.






