தமிழக போட்டி தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயம்..!
தமிழ்நாடு அரசின் அனைத்து பணியிடங்களிலும் 100% தமிழக இளைஞர்களை அமர வைக்கும் வகையில் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாயம் தமிழ் தாளை அறிமுகப்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் வெளிமாநிலத்தவர் அரசு பணிகளில் சேருவதை தடுக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயம் மற்றும் குறைந்த பட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தாளில் தேர்ச்சி பெறாவிட்டால் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தரத்தில் தமிழ் மொழிக்கான பாடத்திட்டம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் பொதுத்தமிழ், பொது ஆங்கிலம், தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வுகளிலும் தமிழ்மொழித் தாள் கட்டாயம் என்றும் 150 மதிப்பெண்கள் கொண்ட தேர்வாக நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீண்ட நாட்களாக நடைபெறாமல் உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அறிவிப்பு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






