பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்ததால் கல்லூரி முதல்வரை தாக்கிய மாணவர்கள்..!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இயங்கிவரும் தனியார் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் கல்லூரி முதல்வருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
மாணவர்கள் சேர்ந்து முதல்வரை தாக்க முயற்சிக்கும் காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன. மேலநீலிதநல்லூர் பகுதியில் இயங்கி வரும் பசும்பொன்-முத்துராமலிங்க-தேவர் கலை அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் சிவக்குமார் என்பவரை கல்லூரி முதல்வர் ஹரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
பணியிடை நீக்கம் காலம் முடிந்து அவர் மீண்டும் கல்லூரிக்கு திரும்பிய போது மேலும் இரண்டு மாதத்திற்கு அவரை பணியிடை நீக்கம் செய்வதாக கூறி கடந்த இரு நாட்களுக்கு முன்னால் மாணவர்கள் கல்லூரி முதல்வரை முற்றுகையிட்டுள்ளனர்.
பேராசிரியரை நீக்குவதால் பாடங்கள் பாதிப்பதாக கூறி முதல்வரிடம் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் சிலர் சேர்ந்து முதல்வரை தாக்க முயற்சித்த காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன. இதனால் கல்லூரி காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி முதல்வர் மற்றும் மாணவர்கள் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்கள் சிலருக்கு தேர்வு எழுத ஹால் டிக்கெட் கொடுக்காமல் இருப்பதாகவும் மாணவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் கல்லூரியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.






