தூத்துக்குடியில் ரூ.38,000 கோடியில் அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம்: விஜய்யுடன் ஹுண்டாய் குழு சந்திப்பு
தூத்துக்குடியில் சுமார் 38,000 கோடி ரூபாய் முதலீட்டில், 15,000 நபர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில் அமையவுள்ள அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களுடன் எச்டி ஹுண்டாய் (HD KSOE) நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், எச்டி ஹுண்டாய் நிறுவனத்தின் உலகளாவிய வணிகப் பிரிவு இயக்குநர் யங் ஹூன் குவான் தலைமையிலான உயர்மட்ட அலுவலர்கள் கலந்துகொண்டு, இம்மாபெரும் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் முதலீட்டு வழிமுறைகள் குறித்து முதலமைச்சருடன் விரிவாக ஆலோசனை நடத்தினர். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது தூத்துக்குடி மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியும், தென் தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளும் பன்மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





