தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்..! கூறியது என்ன?
சட்டத்துக்கு புறம்பாக கொண்டுவரப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் விதிமுறை சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்தை திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுசில் சந்திரா ஆகியோருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்காமல் சட்டத்திற்கு புறம்பாக தேர்தல் நடத்தும் சட்ட திருத்த விதிமுறை 2019 மற்றும் தேர்தல் நடத்தும் விதிமுறை 2020 விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் கூறியுள்ளார். பங்கேற்காத வாக்காளர்கள் முறை போலி வாக்காளர்களை உருவாக்குவதற்கான வாய்ப்பாக அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தபால் ஓட்டு போடுவதற்கு வயது அடிப்படையில் கொடுக்கப்பட்ட திருத்தம் சட்டவிரோதமானது என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். 65 வயதுக்கு மேற்பட்டவர்களை சமுதாயத்திலிருந்து துண்டிப்பதோடு தேர்தலில் பங்கேற்பது இருந்தும் தேர்தல் ஆணையம் விலக்கி வைப்பதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
ஜார்கண்ட், டெல்லி தேர்தலுக்கு மட்டும்தான் என்று குறிப்பிட்டுவிட்டு தமிழகம் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கொண்டு வருவது ஏற்புடையதல்ல என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே தேர்தல் நடத்தும் சட்ட விதிமுறை மற்றும் தேர்தல் நடத்தும் விதி முறையை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.







