“பாடும் நிலா விடை பெற்றது!!” 72 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்!! விண்ணதிர முழக்கமிட்டு விடை கொடுத்த ரசிகர்கள்!!
நாட்டின் இசைப்பிரியர்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு மறைந்த பாடும் நிலா எஸ்.பி.பி.யின் உடல் நல்லடக்கம் தாமரைப்பாக்கம் பண்ணைத் தோட்டத்தில் நடைபெற்றது. அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்ட போது, விண்ணதிர முழக்கம் எழுப்பி கண்ணீர் மல்க அவருக்கு ஏராளமானோர் பிரியாவிடை கொடுத்தனர்.
கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பி. அத் தொற்றிலிருந்து மீண்டாலும், நுரையீரல் பாதிப்பு, மூச்சுத் திணறல் காரணமாக நேற்று காலமானார். அவருடைய மறைவு இந்தியத் திரையுலகையும் , இசைப்பிரியர்களையும் மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டது. 50 ஆண்டு காலத்திற்கு மேலாக தமது குரல் வளத்தால் வானம்பாடியாக பாடித்திரிந்த பாடும் நிலா எஸ்.பி.பி. மறைந்தாலும் அவருடைய பாடல்கள் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு நீக்கமறா நிறைந்திருக்கும் என்பது நிச்சயம்.
நேற்று பிற்பகல் 1.04 மணிக்கு எஸ்.பி.பி.யின் உயிர் மூச்சு பிரிந்த நிலையில் அவரது உடல் மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், இசைக் கலைஞர்கள் பொதுமக்கள் என திரளானோர் கண்ணீர் மல்க அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் எஸ்பிபியின் உடல் நேற்றிரவே திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்துள்ள தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை இல்லத்திற்கு கொண்டுச்செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்த முதலில் அனுமதி அளிக்கப்படவில்லை.
ஆனால் பின்னர் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. எஸ்பிபியின் உடலுக்கு காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அரசியல், திரையுலக மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என முக்கியப் பிரமுகர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளுக்குப் பிறகு காலை 10.30 மணிக்கு எஸ்.பி.பி.யின் குடும்பத்தினர், உறவினர்கள் இறுதிச் சடங்குகளை நடத்தினர். இதற்காக எஸ்.பி.பி.யின் உடல் கண்ணாடிப் பேழையில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டு குடும்ப வழக்கப்படி இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டது.
நல்லடக்கம்
அப்போது எஸ்.பி.பி.யின் மனைவி சாவித்திரி, மகன் சரண், மகள் பல்லவி மற்றும் நெருங்கிய குடும்ப உறவினர்கள் ஆகியோர் துக்கம் தாளாமல் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்கு வதாக இருந்தது. குடும்ப உறுப்பினர்கள் இறுதிச் சடங்குகளை செய்து கண்ணீர் மல்க அவருக்கு பிரியாவிடை கொடுத்த பின் எஸ்.பி.பி.யின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனம் மூலம் பண்ணைத் தோட்டத்தில் அடக்கம் செய்யும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டது. போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் எஸ்.பி.பி.யின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. நல்லடக்கம் நடைபெறும் இடத்தில் நடிகர் விஜய் எஸ்.பி.பி.யின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, எஸ்.பி.பி. சரணுக்கு ஆறுதல் கூறினார்.
72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை
பின்னர்,தமிழக அரசு சார்பில் காவல்துறை மரியாதையுடன் எஸ்பிபியின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த எஸ்.பி.பி.யின் ரசிகர்கள் கூட்டம் பாடும் நிலா எஸ்.பி.பி. வாழ்க… இளையநிலா எஸ்.பி.பி. புகழ் ஓங்குக என கண்ணீர் மல்க விண்ணதிர கோஷம் எழுப்பி தங்கள் நாயகனுக்கு பிரியாவிடை கொடுத்த காட்சி நெஞ்சை உருக்குவதாக அமைந்தது.








