தென் சென்னை – தமிழச்சியா? தமிழிசையா? தென் சென்னையில் யாருக்கு வெற்றி? கடும் போட்டியை தரும் அதிமுகவின் ஜெயவர்த்தன்
தமிழகத்தின் 39 தொகுதிகளில் 3ஆவது தொகுதியாக உள்ளது, தென் சென்னை பாராளுமன்றத் தொகுதி. 1957ஆம் ஆண்டில் இத்தொகுதி உருவாக்கப்பட்டது. தொகுதி மறுசீரமைப்புக்குப் பின், தென் சென்னை தொகுதியில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் தொகுதிகள் இணைக்கப்பட்டன.
சென்னை மாநகரின் மத்தியில் அமைந்துள்ள தொகுதி. பெரிய வர்த்தக நிறுவனங்களும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் இத்தொகுதியில் அமைந்துள்ளன. கோயில்கள், சுற்றுலாப் பகுதிகள், கல்வி நிறுவனங்கள் பலவும் தென் சென்னை தொகுதியில் அமைந்துள்ளன. அதிகளவில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட இத்தொகுதியில், வெளிமாநிலத்தவர், வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர்.
தென் சென்னை தொகுதியில், 6 சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. அவை, விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகியன இடம் பெற்றுள்ளன.
2024இல் தென்சென்னை தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 20,07,816
ஆண் வாக்காளர்கள்: 9,93,590
பெண் வாக்காளர்கள்: 10,13,772
மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 454
தென் சென்னை மக்களவைத் தொகுதி அதிகமுறை திமுக, காங்கிரஸ் கட்சிகளே வெற்றி பெற்றிருக்கின்றன. அதாவது, திமுக 8 முறையும், காங்கிரஸ் 5 முறையும், அதிமுக 3 முறையும் தென் சென்னையில் வெற்றிபெற்றுள்ளன.
தற்போதைய பாராளுமன்றத் தேர்தலில், திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக சார்பில் ஜெயவர்த்தன், பாஜக சார்பில் புதுச்சேரி முன்னாள் ஆளுநரான தமிழிசை சவுந்திரராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் சு/தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் களமிறங்கியுள்ளனர்.
தென் சென்னை தொகுதியை பொருத்தவரை, பல்வேறு வளர்ச்சி கண்டாலும் அதே அளவுக்கு பிரச்சனைகளும் உள்ளன. கடந்த மழையின் போது சென்னை வெள்ளத்தில் மிதந்ததை வைத்தே, அடிப்படை கட்டமைப்புகள் எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதை காட்டுகிறது. ஒவ்வொரு மழை சீசனில் தென் சென்னை தொகுதி மூழ்குவதும், பின்னர் ஆட்சியாளர்கள் யார் மீதாவது பழியை போட்டு சீரமைப்பு மேற்கொள்வதும் வாடிக்கையாக உள்ளது.
பெருங்குடியில் குப்பை குடோன் பிரச்சனைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. கோடையில் பல இடங்களில் குடிநீர் பிரச்சனை தலைதூக்குகிறது. அதுதவிர சாலைவசதி, போக்குவரத்து நெரிசல் போன்றவை தென் சென்னை தொகுதியின் சாபக்கேடுகளாக உள்ளன.
தற்போதைய தேர்தல் களத்தை பொருத்தவரை சிட்டிங் திமுக எம்.பி. தமிழச்சிக்கு அதிமுக, பாஜக இரண்டுமே கடும் போட்டியை தருகின்றன. கடந்த 2019இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் 5,64,872 வாக்குகள் பெற்று திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்றார். எனினும், தொகுதி பக்கம் தலைகாட்டவில்லை என்ற அதிருப்தி அவர் மீது உள்ளது. குறிப்பாக, வெள்ளம் வந்து மக்கள் பாதித்த போதுகூட எம்.பி. என்ற முறையில் தமிழச்சி தங்கபாண்டியன் எட்டிப்பார்க்கவில்லை என்று தொகுதி மக்கள் நம்மிடம் குமுறினர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் போட்டியிடுகிறார். தொகுதியில் நன்கு அறிமுகம் ஆனவர் ஜெயவர்த்தன். தந்தை ஜெயக்குமாருக்கும் அதிமுகவுக்கும் உள்ள கணிசமான செல்வாக்கு, தமிழச்சியின் வாக்கு சதவிகிதத்தை குறைக்கும் என்பது, நமது நேரடி கள ஆய்வில் தெரிய வருகிறது.
களத்தில் இறங்கி மக்கள் பணியாற்றுபவர் என்ற பெயரை தென் சென்னை மக்களிடத்தில் ஜெயவர்தன் பெற்று இருக்கிறார். எம்.பி.யாக இருந்த போதும் சரி, இல்லாத போதும் சரி, தொகுதியில் எந்தப் பிரச்சினை வந்தாலும் களத்தில் நிற்கக்கூடியவர் என்பது ஜெயர்வர்தனுக்கு சாதகமான அம்சம் ஆகும்.
பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சவுந்திரராஜனும் திமுகவிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். புதுச்சேரி மாநில ஆளுநர் பதவியை உதறித் தள்ளிவிட்டு களமிறங்கி இருக்கும் அவர், தொகுதி முழுக்க கடும் வெயிலை பொருட்படுத்தாமல் வலம் வந்து வாக்கு சேகரிக்கிறார். தென் சென்னையில் போட்டி போடுவது வேண்டுமானால், தமிழிசைக்கு முதன்முறை என்றாலும், அத்தொகுதி மக்களுக்கு அவர் புது முகம் கிடையாது. பல ஆண்டுகளாக தென் சென்னையில் வசித்து வருபவர் தமிழிசை செளந்தரராஜன். தென் சென்னைவாசி என்பதையும் தாண்டி, அங்கு பல ஆண்டுகளாக மருத்துவமனையும், குறைந்த விலையில் ஸ்கேன் மையத்தையும் தமிழிசை செளந்தரராஜன் நடத்தி வருகிறார்.
மயிலாப்பூர், தி. நகர், மாம்பலம் பகுதிகளில் பாஜகவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. இதுவும் திமுக, அதிமுகவுக்கு உள்ள பாதக அம்சமாகும். அண்மையில் மோடி இங்கு வந்து ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரித்தார். அதெல்லாம் தனது வெற்றிக்கு உதவும் என்று தமிழிசை நம்புகிறார்.
எனினும், படித்தவர்கள் பலரும் உள்ள இத்தொகுதியில், வழக்கம்போல் திமுக ஆதரவே மேலோங்கிக் காணப்படுகிறது. தென் சென்னை தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக எம்எல்ஏக்கள் தான் உள்ளனர். அவர்கள் களத்தில் நின்று ஆற்றும் களப்பணி நிச்சயமாக திமுகவுக்கு பலன் தரும். நகர்ப்புறங்கள் எப்போதும் திமுகவுக்கு கைகொடுக்கும் என்பது, தென் சென்னையிலும் உறுதியாகி இருக்கிறது.
மொத்தத்தில் பார்த்தால் தென் சென்னையில் தமிழச்சியே வெற்றி பெறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. எனினும் ஜெயவர்த்தன், தமிழிசை தரும் கடும் போட்டியால், கடந்த முறை போல் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி என்பது இருக்காது என்பதை கள நிலவரங்கள் சொல்கின்றன.





