ஆழ்துளையில் விழும் குழந்தையை மீட்க எளிய முறை
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் உயிரிழந்த சம்பவம் இது போன்ற நிகழ்வு மீண்டும் நடக்காமல் இருக்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்துளையில் விழும் குழந்தைகளை மீட்பதற்கான கருவிகளை கண்டுபிடிப்பதில் பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் நாகை மாவட்டம் சீர்காழி அருகே அரசு பள்ளி மாணவி சமீரா எளிமையாக குழந்தை மீட்பு முறையை உருவாக்கியுள்ளார். அதன்படி இரு காந்தங்களை பயன்படுத்தி குழந்தையின் பக்கவாட்டு பகுதி வழியே கீழே இறக்கி அவற்றை ஒன்றிணைக்கிறார்.
பின்னர் ஒரு புறமாக காந்தத்தை மேல் நோக்கி இழுத்து அதன் வழியே பட்டையான கயிறு இணைத்து மறுபுறம் இழூக்கும்போது குழந்தை கயிற்றில் அமர்ந்த நிலை ஏற்படுகிறது.
அந்த கயிற்றில் முடிச்சு போட்டு குழந்தை இருக்கும் நிலையில் லாக் செய்து அப்படியே மேல்நோக்கி லாவகமாக எடுக்கலாம் என செயல்விளக்கம் அளித்து காட்டியுள்ளார். மேம்படுத்தப்பட்ட அமைப்பாக இதனை உருவாக்கினால் ஆயிரம் ரூபாயில் இதனை செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.






