--- --:--:-- --

பதறச்செய்த பல்லடம் படுகொலைகள்! சிக்கிய கொலையாளி… சிதைந்து போன குடும்பம்..!

11

முழு பின்னணி! போலீஸ் அலட்சியத்தால் சமூக விரோதிகள் கூடாரமாகும் அவலம்!

 

ல்லடத்தில், மது அருந்தியதை தட்டிக்கேட்டதற்காக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை கண்டதுண்டமாக வெட்டிப் போட்ட போதை ஆசாமிகளின் வெறிச் செயல், தமிழகத்தையே அதிர்ச்சியில் உலுக்கியுள்ளது. இச்சம்பவத்தால், பல்லடத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. டாஸ்மாக், போதைப்பொருள், குவாரி விவகாரம் என்று பல்லடம் சமூக விரோத கும்பல்களில் பிடியில் சிக்கியதற்கு போலீசாரின் அலட்சியமே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ளது, கள்ளக்கிணறு கிராமம். இங்கு வசிப்பவர் செந்தில்குமார் (47). தவிடு புண்ணாக்கு வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருடைய சித்தப்பா மகன் மோகன்ராஜ் (45). இவர்கள் கள்ளக்கிணறு பகுதியில் அடுத்தடுத்து உள்ள வீடுகளில் வசித்து வந்தனர். நேற்றிரவு (செப். 3ம் தேதி) இவரது வீட்டின் அருகே 3 பேர் கொண்ட கும்பல் மது அருந்தி அடவாடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

 

தனியே கிடந்த உடல் பாகங்கள்

 

மது அருந்திவிட்டு சத்தம் போட்டுக் கொண்டிருந்தவர்களை, செந்தில்குமார் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், தாங்கள் வைத்திருந்த அரிவாளால் செந்தில்குமாரை சரமாரியாக வெட்டினர். அவரின் அலறல் கேட்டு வந்த அவரது தம்பி மோகன்ராஜ் மற்றும் மோகன்ராஜின் தாய் புஷ்பவதி, செந்தில்குமாரின் சித்தி ரத்தினாம்பாள் ஆகியோரையும் அந்த மதுபோதைக் கும்பல் விட்டுவைக்கவில்லை. அப்போது அந்த கும்பல் இவர்களையும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கண்மூடித்தனமாக வெட்டினர். இதில் நான்கு பேரின் கை, கால்கள் என தனித்தனியாக வெட்டி வீசப்பட்டன. இதுபோல் முகத்திலும் அரிவாளால் வெட்டு விழுந்துள்ளது.

 

ஒருசில நொடிப்பொழுதில் இந்த சம்பவம் நடந்து முடிந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் துடித்துத்து சாய்ந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனிடையே 4 பேரையும் வெட்டிச்சாய்ந்த மதுபோதை கும்பல், அங்கிருந்து தப்பியோடியது. அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஓடோடி வந்து பார்த்தபோது ரத்தவெள்ளத்தில் நான்கு பேரும் சடலமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

 

கொலையில் ஈடுபட்டவர்கள் வெறி கொண்டு வெட்டி வீழ்த்தியதால் அந்த தெரு முழுவதும் கொலை செய்யப்பட்டவர்களின் கை, கால்கள் மற்றும் உடற்பாகங்கள் சிதறிக்கிடந்தன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் போலீசார், 4 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

இதற்காக திருப்பூர் அரசு மருத்தவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து 7 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் சென்றனர். விரைவாக பிரேதப் பரிசோதனை அறிக்கை வழங்க வேண்டும் என்பதால், அனுபவமிக்க இந்தக் குழு அனுப்பப்பட்டது.

 

மறியல், போலீஸ் குவிப்பு!

 

இதனிடையே, இந்த தகவல் காட்டுத்தீயாக பல்லடம் பகுதியில் பரவ, ஒரே பரபரப்பு தொற்றிக் கொண்டது. படுபாதகக் கொலையில் ஈடுட்ட கொலையாளிகளை கைது செய்யக்கோரி, பொதுமக்கள் அந்த பகுதியில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து விரைவாக கைது செய்வதாகக்கூறி போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

 

ஒரே குடும்பத்தில் 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழக அளவில் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திய நிலையில், சம்பவ இடத்திற்கு திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பவானி ஈஸ்வரி, பல்லடம் டி.எஸ்.பி. சவுமியா ஆகியோர் விரைந்தனர்.

 

சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய அதிகாரிகள், இறந்தவர்களின் சடலங்கள் இருந்த பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டனர். அத்துடன், கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மேலும், தனிப்படை போலீசார் திருப்பூர் மாவட்ட செக்போஸ்டுகளில் பாதுகாப்பை அதிகரித்து தீவிர சோதனை நடத்தினர். கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் தனிப்படை விரைந்தது.

 

பதற்றம் நிலவும் பல்லடத்தில் அசம்பாவிதச் சம்பவம் நடக்காமல் இருக்க, 700க்கும் மேற்பட்ட போலீசார் பல்லடம் மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

கொலையான செய்யப்பட்டத்தில் மோகன்ராஜ், மாதப்பூர் பஞ்சாயத்து பா.ஜ.க. கிளைத்தலைவர் என்பதால் அரசியல் பிரமுகர்களும் அங்கு திரண்டு, மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் மேற்கு மண்டல ஐஜி பவானிஸ்வரி பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

 

முன் விரோதத்தால் கொலையா?

 

பல்லடம் படுகொலையில், மது போதையில் மட்டுமே இந்த படுகொலைகள் நடந்திருப்பதாக தெரியவில்லை என்று நம்பப்படுவதால், முன் விரோதம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. கொலை செய்யப்பட்ட தவிடு, புண்ணாக்கு வியாபாரி செந்தில்குமாரிடம் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் (34) என்பவர் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார்.

 

கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பணம் பிரச்சினை தொடர்பாக செந்தில்குமார், வெங்கடேசை வேலையை விட்டு நீக்கியுள்ளார். இதில் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்ததாகத் தெரிகிறது. இந்த சூழலில் தான், வெங்கடேஷ் மற்றும் சிலர், செந்தில்குமாருக்கு சொந்தமான இடத்தில் மது அருந்தி பிரச்னையை ஏற்படுத்தி, அதன் பின் கொடூர கொலையை நிகழ்த்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.

 

சிக்கிய முக்கிய குற்றவாளி

 

பல்லடம் 4 பேர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான குட்டி என்கிற வெங்கடேஷ் கருதப்படும் நிலையில், அவரை தனிப்படை போலீஸார் தற்போதுபிடித்து விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. நான்கு பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில், அவர்களின் சடலங்களை பெற உறவினர்கள் மறுத்து வருகின்றனர்.

 

இதனால் பல்லடத்தில் பதற்றம் நீடித்தபடி உள்ளது. அசம்பாவிதங்களைத் தடுக்க மேற்கு மண்டல ஐஜி பவானிஸ்வரி தலைமையில் டிஐஜி சரவண சுந்தர், திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் பிரவீண்குமார் அபிநவ், காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன், பல்லடம், தாராபுரம், காங்கேயம் துணைக் கண்காணிப்பாளர் கண்காணிப்பில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. கலவர தடுப்பு நடவடிக்கையாக வஜ்ரா வாகனமும் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

 

பல்லடம் சுற்றுப்பகுதிகளில் ஏராளமான கல் குவாரிகள் உள்ளன. அதேபோல், பல்லடம் பகுதியில் டாஸ்மாக் கடைகள், சட்டவிரோத மதுபான பார்கள் செயல்பட்டு சமீபத்தில் சர்ச்சைகள் கிளம்பின. போதைப் பொருட்கள் மிக எளிதாகக் கிடைப்பதால், சட்டவிரோதச் செயல்கள் பல்லடத்தில் சர்வ சாதாரணமாக நடக்கிறது.

 

இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய பல்லடம் போலீசார், மாமூம் வாங்கிக் கொண்டுவிட்டு இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை என்று பொதுமக்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அமைந்துள்ளதால் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் எளிதாக தப்பிவிட ஏதுவாக உள்ளது. ஆனால், போலீசாரின் கண்காணிப்போ பெயரளவுக்குத்தான் உள்ளது.

 

குற்றச்செயல்கள் நடக்கும் போது பேரளவுக்கு விசாரிக்கும் போலீசார், பின்னர் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் அலட்சியமாக உள்ளனர். எனவே, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, விசாரணையில் தொய்வாக செயல்படும் போலீசாரை கூண்டோடு மாற்ற வேண்டும்.

 

அப்போது தான் சமுக விரோதிகளின் பிடியில் உள்ள பல்லடம் பழைய இயல்பு நிலைக்கு திரும்பும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

 

முதல்வர் அதிர்ச்சி;  எடப்பாடி கண்டனம்:

 

பல்லடம் படுகொலை சம்பவம் தொடர்பாக பலரும் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தனது அதிர்ச்சியையும் வேதனையையும் தெரிவித்துள்ளார். அத்துடன் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டம் முன் நிறுத்த வேண்டுமென்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

 

இச்சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சி காலத்தில் நாள்தோறும் நம் மாநிலம் கொலை கொள்ளை என கொலை மாநிலமாகவும், சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்த தமிழகமாகவும் , போதை பொருட்களின் தலைநகரமாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

 

இதனை சரி செய்ய வேண்டிய இடத்தில் உள்ள முதலமைச்சரோ வெற்று விளம்பரத்தில் மட்டும் தனது முழு கவனத்தையும் செலுத்தி கொண்டிருப்பது வெட்கக்கேடானது. காவல் துறையை கையில் வைத்துக் கொண்டு மக்களைக் காப்பாற்ற துப்பு இல்லாமல், நிர்வாக திறனற்ற பொம்மை முதலமைச்சருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Right Menu Icon