கடைசி கட்டத்தில் திருப்பம்! அதிமுகவில் இணைந்த அமமுக வேட்பாளர்…
சட்டமன்றத் தேர்தலுக்கு ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், திடீர் திருப்பமாக சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளர் கொல்லிமலை பி. சந்திரன் திருச்செங்கோட்டில் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் பொன் சரஸ்வதி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மின்துறை அமைச்சர் தங்கமணி பிரசாரம் செய்ய வந்தார். அப்போது, அவரது முன்னிலையில் சேந்தமங்கலம் தொகுதி அமமுக வேட்பாளரான, அமமுக நாமக்கல் மாவட்ட துணை செயலாளர் கொல்லிமலை பி.சந்திரன் தன்னை அதிமுகவில் இணைந்தார். இனி அவர் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
அதிமுக இணைந்த சந்திரன் நிருபர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஜெயலலிதாவின் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக அதிமுகவில் இணைந்துள்ளேன். இன்றைய சூழ்நிலையில் தீயசக்தி திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுக்க அதிமுகவில் இணைந்து செயல்படுவது தான் சரியாக இருக்கும் என கருதினேன். அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வேலை செய்வேன் என்றார்.





