இளைஞர்களுக்கு மூத்த தலைவர்கள் வழிவிட வேண்டும் – அமைச்சர் துரைமுருகன்
திமுகவில், இளைஞர்களுக்கு மூத்த தலைவர்கள் வழிவிட வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது. திமுகவில் இளைஞர்களுக்கு மூத்த நிர்வாகிகள் வழிவிடுவது குறித்து ரஜினி – துரைமுருகன் பேசியது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அதன் தொடர்பாக மீண்டும் துரைமுருகன் பேசியுள்ளார்.
பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடனான தனது நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் ‘கலைஞர் எனும் தாய்’ என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். இதற்கான வெளியீட்டு விழா கடந்த மாதம் 24ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட, அதை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய ரஜினிகாந்த், “ஒரு வகுப்பறையில் டீச்சருக்குப் புதிய மாணவர்களைப் பற்றி பிரச்சனை இல்லை; பழைய மாணவர்களைச் சமாளிப்பதுதான் சிரமம்.
அந்த வகையில் இங்கு நிறைய சீனியர்கள் இருக்கிறார்கள். அவர்களில் துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். அவர் கலைஞர் கண்ணிலேயே விரல்விட்டு ஆட்டியவர். கலைஞர் ஒரு விஷயத்தைச் சொன்னால், அதற்கு ‘அப்படியா! சந்தோஷம்’ என்று துரை முருகன் பதில் அளிப்பார்.
அவர் நன்றாக இருக்கிறது ‘சந்தோஷம்’ என்று பதில் அளிக்கிறாரா? அல்லது நன்றாக இல்லை என்பதற்காக ‘சந்தோஷம்’ என்று பதில் அளிக்கிறாரா என்பதைப் புரிந்து கொள்ள முடியாது” என்றார். ரஜினிகாந்தின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது.
இதற்குப் பதிலடியாகப் பேசிய அமைச்சர் துரைமுருகன், “மூத்த நடிகர்கள் எல்லாம் வயசாகி, பல்லு விழுந்து, தாடி வளர்த்து நடிக்கிறதுனாலதான் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது” எனப் பதில் அளித்தார்.
இப்படி சர்ச்சை அதிகமாக, ரஜினியைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில் தான், திமுகவில், இளைஞர்களுக்கு மூத்த தலைவர்கள் வழிவிட வேண்டும் என்று துரைமுருகன் பேசி உள்ளார்.





