செங்கோட்டையன் திமுகவில் சேருவதுதான் சிறந்த வாய்ப்பு – அன்வர் ராஜா
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை, கட்சி பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இதனைத் தொடர்ந்து, பசும்பொன்னில், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை செங்கோட்டையன் சந்தித்த நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த செங்கோட்டையன், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதாக தகவல் வெளியானது.
அதற்கு ஏற்ப, சென்னை தலைமைச் செயலகத்தில், சபாநாயகர் அப்பாவுவை சந்தித்த செங்கோட்டையன், கோபிச்செட்டிபாளையத்தின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அவர் தவெகவில் இணைய இருப்பதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.
மற்றொரு தரப்பினர் அவர் திமுகவில் இணைவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என சொல்லி வருகிறார்கள். ஆனால், செங்கோட்டையன் இதுவரை எந்தத் தகவலையும் உறுதி செய்யவில்லை. இந்நிலையில், அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்த அன்வர் ராஜா, செங்கோட்டையன் ராஜினாமா செய்தது தொடர்பாக நியூஸ்18 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.
அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது, “எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்ததில் இருந்து, வேறு ஒரு கட்சியில் இணைய போகிறார் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. அவர் திமுகவுக்கு வரவேண்டும். அல்லது அவரது விருப்பத்தின் படி எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் போகலாம். ஆனால், அவர் திமுகவுக்குத்தான் வருவார் என நான் நம்புகிறேன்.
அவரது இத்தனை ஆண்டு உழைப்பு தொடர்ந்து திராவிட இயக்கங்களுக்கு பயன்பட்டால், அது அவருக்கும், தமிழ்நாட்டுக்கும் நல்லது. அதுக்கான ஒரே வாய்ப்பு திமுகவில் சேருவதுதான். அப்படிதான் அவரும் சேருவார் என நான் நம்புகிறேன்.





