--- --:--:-- --

புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு… எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டம்… பள்ளிகளை இழுத்து மூடியதால் பதற்றம்!!

14

புதுச்சேரியில் 7 மாதங்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அதிமுகவினர் பல பள்ளிகளை இழுத்து மூடியதால் பதற்றம் ஏற்பட்டது.

 

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. தமிழகம், புதுச்சேரியிலும் இதே நிலைதான். பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கில் 5-ம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அதில், அக்டோபர் 15-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்கலாம். பள்ளிகளைத் திறப்பது குறித்த இறுதி முடிவுகளை, அந்தந்த மாநில அரசுகளே எடுத்துக்கொள்ளலாம் என குறிப்பிட்டிருந்தது. மேலும் பள்ளிகளைத் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டது.

 

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது. பாட சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள 9,10,11,12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். பெற்றோரின் விருப்ப கடிதம் இருந்தால் மட்டுமே பள்ளிக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

 

10, 12- ஆம் வகுப்புக்கு மூன்று நாட்களும், 9, 11- ஆம் வகுப்புக்கு மூன்று நாட்களும் என சுழற்சி முறையில் வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளிகள் இயங்கும். காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடக்கும் வகுப்புகளுக்கு மாணவர் வருகை பதிவு செய்யப்படாது. பாட சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள வரும் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் வகுப்பறையில் அமர வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்று புதுச்சேரி அரசு தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில புதுச்சேரியில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்த புதுச்சேரி அரசின் முடிவுக்கு, காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. எதிர்க்கட்சியான அதிமுகவோ பள்ளிகளை திறந்தால் போராட்டம் நடத்துவோம். அதிமுக எம்எல்ஏக்கள் தொகுதியில் பள்ளிகளை திறந்தால் இழுத்து மூடும் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

 

புதுச்சேரி அரசு அறிவித்தபடி இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை தந்தனர். ஆனால் அதிமுகவினரோ புதுச்சேரி மாநிலத்தின் பல பகுதிகளில் பள்ளிகள் திறப்புக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் உப்பளம் தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் திறக்கப்பட்ட பல தனியார் பள்ளிகளையும் அதிமுகவினர் இழுத்து மூடி எதிர்ப்பு தெரிவித்ததால் பல இடங்களில் பதற்றம் ஏற்பட்டது.

Leave a Reply

Right Menu Icon