--- --:--:-- --

ஜூலை15 முதல் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம்… இதிலாவது பள்ளிக்கல்வித் துறை திடமாக இருக்குமா?

16

அரசுப் பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 15-ந் தேதி முதல் விலையில்லா பாடப் புத்தகங்கள்
விநியோகம் செய்யப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.கொரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடிக்கிடக்கின்றன. பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வுகள், பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிப் போய்க் கொண்டு உள்ளன.

 

கொரோனா கொடுமை முடிவுக்கு வந்தபாடில்லாமல், தொற்று பாதிப்பு நாளுக்கு உக்கிரம் அடைந்து வருவதால் அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளி, கல்லூரி திறப்பு எப்போது என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது. இதில் தமிழக பள்ளிக்கல்வித் துறை செய்யும் குளறுபடிகள் மாணவர்களையும் , பெற்றோர்களையும் பெரும் குழப்பமடையச் செய்து வருகிறது.

 

பாடங்கள் சம்பந்தமாகவும், ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது தொடர்பாகவும் திடீர், திடீரென ஒரு உத்தரவை போடுவதும் பின்னர் அதை ரத்து செய்வதுமாக குளறுபடிகள் தொடர்கின்றன. தற்போது கூட ஆன்லைனில் பாடம் நடத்துவதற்கு பதிலாக கல்வி டிவி மூலம் பாடம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரு தெளிவான முடிவெடுக்காமல் பள்ளிக்கல்வித் துறை மீண்டும், மீண்டும் மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள், கல்வியாளர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு டிவி மூலம் பாடம் நடத்தும் முடிவுப்படி, மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் விரைந்து வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை நேற்று அறிவித்தது. அதன்படி முதற்கட்டமாக 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வரும் 15-ந் தேதி முதல் அந்தந்த பள்ளிகளில் புத்தகங்கள் வழங்கப்படும் எனவும், கொரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக புத்தகங்கள் வரும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் தமிழக பள்ளிக்கல்வித் துறை வழி காட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

 

ஒரு மணி நேரத்துக்கு 20 மாணவர்களை அல்லது பெற்றோரை வரவழைத்து, சமூக விலகலை பின்பற்றி புத்தகங்கள் வழங்க வேண்டும். கண்டிப்பாக அனைவரும் முகக் கவசம், கையுறை அணிய வேண்டும் என்பது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

 

மேலும் 12ம் வகுப்பு மாணவர்கள் அரசு வழங்கிய விலையில்லா மடிக்கணினியை பள்ளிக்கு எடுத்து வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon