கொரோனா பாதிப்பு குறையவில்லை… மருத்துவமனையில் சச்சின் அனுமதி!
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடித்து வந்ததை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவனான முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், அண்மையில் சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரில் பங்கேற்றார். அதில் சிறப்பாக விளையாடி, இந்திய அணிக்கு கோப்பையையும் சச்சின் பெற்றுக் கொடுத்தார். அந்த அணியில் விளையாடிய வீரர்களான சச்சின் டெண்டுல்கர், பத்ரிநாத், இர்பான் பதான், யூசுப் பதான் ஆகியோருக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து சச்சின் உள்ளிட்டோர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர்.
எனினும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி இன்று மும்பையில் உள்ள மருத்துவமனையில் சச்சின் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக சச்சின் டெண்டுல்கர் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் உங்களது வேண்டுதல்கள் மற்றும் வாழ்த்துகளுக்கு நன்றி. மருத்துவ ஆலோசனையின்படி கூடுதலான முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். அடுத்த சில நாட்களில் நான் வீடு திரும்புவேன் என நம்புகிறேன். ஒவ்வொருவரும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருங்கள் என்று கூறியுள்ளார்.





