--- --:--:-- --

அடாவடி ஆர்.ஐ. மெய்யப்பன் பந்தாட்டம்.. திருவாடானை மக்கள் கொண்டாட்டம்!

dryed

திருவாடானை உள்வட்ட வருவாய் ஆய்வாளர் மெய்யப்பன் மீது அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இது திருவாடானை பகுதி மக்களை நிம்மதியடையச் செய்துள்ளது.

 

ரசு அலுவலகங்களுக்கு சென்றால் லஞ்சம்; அதிகாரிகள் என்றாலே ஊழலில் திளைப்பவர்கள் என்ற எண்ணம் பரவலாக மக்கள் மத்தியில் உள்ளது. முதலமைச்சரோ, அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பாக செயல்பட்டால் கூட, வசூல்வேட்டையில் ஈடுபட்டு மக்களை சுரண்டும் அதிகாரிகளால் அரசுக்குத்தான் அவப் பெயர் உண்டாகிறது. அத்துடன், மக்களும் தேவையற்ற இன்னலுக்கு ஆளாகின்றனர்.

 

இதற்கு உதாரணமாக, இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை உள்வட்ட வருவாய் ஆய்வாளர் (ஆர்.ஐ.) மெய்யப்பனை குறிப்பிடலாம். வருவாய்த்துறை சார்ந்த பணிகளுக்கு ஆர்.ஐ. அலுவலகத்திற்கு சென்றால், வருவாய் ஆய்வாளர் மெய்யப்பனிடம் ‘கப்பம்’கட்டாமல் எந்த காரியமும் நடப்பதில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது.

 

அவர் மீதான அடுக்கடுக்கான புகார்கள் குறித்து “குற்றம் குற்றமே” இதழுக்கு தகவல் வர, நமது நிருபர்கள் குழு இது குறித்து விசாரணையில் இறங்கியது. பொதுமக்களை சந்தித்து, ஆர்.ஐ. மெய்யப்பன் மீதான புகார்கள் குறித்து கேட்டறிந்தது.

 

பொதுமக்கள் கூறியதாவது: பட்டா, சிட்டா, அடங்கல், வருவாய்த்துறை சான்றிதழ் தொடர்பான பணிகள், கள ஆய்வு, ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்டவற்றுக்கு திருவாடானை வருவாய்த்துறை அலுவலகத்திற்கு செல்கிறோம். ஆனால், வருவாய் ஆய்வாளராக இருந்து வரும் மெய்யப்பன், மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்துடன் நடந்து கொள்வதில்லை.

 

எல்லாவற்றுக்கும் பணத்தை நீட்டினால் தான் வேலை நடக்கும் என்பது, அங்கு எழுதப்படாத சட்டமாக உள்ளது. ஏழை, வசதியற்ற மக்கள் வருவாய்த்துறை சார்ந்த சேவைகளுக்காக அணுகினால், பணம் தராதபட்சத்தில் தேவையின்றி அலைக்கழிக்கப்படுகின்றனர். இதுபோன்ற அதிகாரிகளால் மக்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாவதோடு, காலவிரயம் உண்டாகிறது. இதுபோன்ற அதிகாரிகளால் அரசுக்குத்தான் அவப்பெயர் உண்டாகிறது. இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

 

இதேபோல், அ.கீழக்கோட்டை பகுதி மக்கள் சிலர் நம்மிடம் கூறுகையில், “அ.கீழக்கோட்டையில் புகழ்பெற்ற ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் திருக்கோவில் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் அண்மையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

 

இக்கோவிலுக்கு மின் இணைப்பு கேட்டு, அண்மையில் கிராம நிர்வாக அலுவலரை கோவில் தரப்பில் அணுகி உள்ளனர். மின் இணைப்புக்கு தேவையான விண்ணப்பத்திற்கு, கிராம நிர்வாக அலுவலர் தரப்பில் ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், அடுத்ததாக திருவாடானை வருவாய் ஆய்வாளரை அணுகியுள்ளனர்.

 

ஆனால் ஆர்.ஐ. மெய்யப்பன் கோவிலுக்கு மின் இணைப்புக்கு ஒப்புத தர, தேவையின்றி அலைக்கழித்துள்ளார். பின்னர் தான் தெரிந்தது, எந்தவொரு வேலை நடக்க வேண்டுமானாலும் பணம் தள்ளினால்தான் நடக்கும் என்பது.

 

பொதுமக்கள் வழிபாடு நடத்தும் கோவிலுக்கு மின் இணைப்பு வழங்க, பணத்தை வருவாய் ஆய்வாளர் எதிர்பார்த்தது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. உண்மையில், இதுபோன்ற தரும காரியங்களுக்கு அரசு நிர்வாகம் தரப்பில் ஆர்வமுடன் ஒத்துழைப்பு தந்திருக்க வேண்டும்; ஆர்.ஐ. மெய்யப்பன் அப்படி செய்யவில்லை. அவரது இத்தகைய செயல்பாடுகளுக்கு நிச்சயம் தக்க பலன் கிடைக்கும் என்றனர்.

 

பக்தர்களின் இந்த கூற்றை நிரூபிக்கும் வகையில், வசூல் வேட்டையில் கொழுத்து திளைத்த வருவாய் ஆய்வாளர் மெய்யப்பன், உடனடியாக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். அவரை திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதிப்பெருமூச்சு அடைந்துள்ளனர்.

 

அதேநேரம், பணத்தில் திளைக்கும் இதுபோன்ற அதிகாரிகளை பணியிட மாறுதல் என்ற ஒன்றோடு நிறுத்திவிடக்கூடாது; மாறாக அவர்கள் மீதான குற்றச்சாடுகளை தீவிரமாக விசாரிக்க வேண்டும். தவறிழைப்பது கண்டறியப்பட்டால் துறைரீதியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் அதிகாரிகளை சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அடையாளம் கண்டு கண்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Right Menu Icon