அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டுக்கு போட்டியாக ரிலையன்ஸின் ஜியோ மார்ட்
இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் தற்போது இணையதள வர்த்தகத்தில் களமிறங்கியுள்ளது. ஜியோ மார்ட் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த நிறுவனம் பல்வேறு சலுகைகள் மூலம் ஏற்கனவே முன்னணியில் இருக்கும் அமேசான், பிலிப்காட் நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
2016ஆம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் பல்வேறு சலுகைகள் வழங்கியதால் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்கள் ஆட்டம் கண்டன. தொழில் போட்டியை சமாளிக்க முடியாமல் அவைகளும் சலுகைகளை வழங்கின. ஜியோவின் 32.2 கோடி வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டே ஜியோ மார்ட் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக மும்பை, நவி மும்பை, தாணி ஆகிய பகுதிகளில் சிறிதாக தொடங்கப்பட்டு பின் நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 3,000 ரூபாய் மதிப்பிலான சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐம்பதாயிரம் ரூபாய் மளிகை பொருட்கள் விற்பனையுடன் தொடங்கும் ஜியோ மார்ட் டெலிவரி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸிவிக்கி, ஜோமாட்டோ போல அருகாமையில் உள்ள சில்லறை வணிகர்களிடமிருந்து கூட இந்த ஆப் மூலம் பொருட்களை வாங்க முடியும் என சொல்லப்படுகிறது. இதனால் ஜியோ மார்ட் பதிவுசெய்யப்பட்ட வணிகர்களுக்கு லாபம் தான் என்கின்றனர் வர்த்தகர்கள்.
வெளிநாடுகளை சேர்ந்த இணையதள வர்த்தக நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை நேரடியாக இந்தியாவில் விற்பனை செய்வதை கட்டுப்படுத்தும் வகையில் சில விதிமுறைகளை இந்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அதன்மூலம் அமேசான், மற்றும் ஃபிலிப்கார்ட் நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இத்தகைய கட்டுப்பாடுகள் இந்திய நிறுவனமான ஜியோ மார்ட்க்கு இல்லை. அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள் பிரதானமாக எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ஆடை அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்கின்றன. அமேசான் ஃபிரெஷ், அமேசான் பேன்றியில் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
ஜியோ மார்ட் மளிகைப் பொருட்களில் கவனம் செலுத்துவதால் குறுகிய காலத்தில் அமேசான், ஃப்ளிப்கார்ட் பிரச்சனை இல்லை என்றாலும் ஜியோ மார்ட் விரிவடைய இந்த நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.





