--- --:--:-- --

ராம்லீலா மைதானத்தில் மோடி முன்னிலையில் டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு..!       

11

டெல்லி சட்டசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமலேயே தேர்தலை சந்தித்து பா.ஜ.க.  மொத்தம் உள்ள 70 இடங்களில் 48 இடங்களில்  வெற்றி பெற்றதுடன்  கிட்டத்தட்ட 27 ஆண்டுக்கு பிறகு டெல்லியில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியது. டெல்லியின் அடுத்த முதல் மந்திரி யார் என நேற்று வரை அறிவிக்கப்படவில்லை.

 

டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களை கடந்து விட்ட நிலையில் நேற்று இரவு டெல்லியில் அடுத்த முதல் மந்திரியை தேர்வு செய்வதற்கான பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்  நடந்தது. புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்திய பர்வேஷ் வர்மா தான் முதல்வர் ஆக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

 

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக புதிய முதல் மந்திரியாகரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து , டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்த ரேகா குப்தா தனது ஆதரவாளர்கள் கடிதத்தை அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோர, அவரது மனுவை ஏற்றுக்கொண்ட ஆளுநர் சக்சேனா ரேகா குப்தாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.

டெல்லியின் ஷாலிமார் பாக் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 51 வயதான ரேகா குப்தா  அடிமட்ட தொண்டராக பா ஜ க வில்  அரசியலை தொடங்கியவர். திறமையாக பணியாற்றியதால் இன்று முதல்வராக உயர்ந்து இருக்கும்  ரேகா குப்தா டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளராக இருந்தவர்.

 

பாஜகவின் டெல்லி மாநில பிரிவின் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார்.1996-1997 ஆம் ஆண்டில் டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்தார். 2007,2012 ஆம் ஆண்டுகளில்  டெல்லி மாநகராட்சியில் உள்ள உத்தரி பிடம்புரா (வார்டு 54) இல் இருந்து கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

 

டெல்லியின் ஷாலிமார் பாக் தொகுதியில் முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் இன்று முதல் முறையாக டெல்லி முதல்வராகவும்  ஆகியுள்ளார். முன்னாள் பெண் முதல் அமைச்சர்களான பா.ஜ.க வின் சுஷ்மா சுவராஜ், காங்கிரஸ் கட்சியின் ஷீலா தீட்சித், ஆம் ஆத்மி கட்சியின்  அதிசி ஆகியோருக்கு அடுத்து நான்காபெண் முதல்வர் என்ற பெருமையை ரேகா குப்தா பெற்றுள்ளார்.

 

பாஜக எம்எல்ஏ ரேகா குப்தா டெல்லி முதல்வராக பதவியேற்கும் விழா, இன்று வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் டெல்லியின் மையப்பகுதியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடந்தது.டெல்லியின் 9 வது  முதல்வராக பாஜகவின் ரேகா குப்தா பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் துணை நிலை ஆளுநர் வி கே சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

 

தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலை தோற்கடித்த  பர்வேஸ் வர்மா துணை முதல்வராகவும், டெல்லி அமைச்சர்களாக ஆஷிஷ் சூட், மஞ்சிந்தர் சிங் சிர்ஷா, ரவீந்தர் இந்திரராஜ் சிங், கபில் மிஸ்ரா மற்றும் பங்கஜ்குமார் சிங் ஆகியோரும் பதவி ஏற்று கொண்டனர்.

 

 

இந்த பதவி ஏற்பு விழாவில்  பாஜக தலைவர் ஜே பி நட்டா, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின்  முதல்வர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த பதவியேற்பு நிகழ்விற்காக நகரின் மத்திய, வடக்கு மற்றும் புது டெல்லி பகுதிகளில் 25,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

Right Menu Icon