கொலு பொம்மைகள் போன்று வேடமணிந்து அசத்திய பள்ளி குழந்தைகள் !!!
கோவையில் வித்யாஸ்ரமம் மழலையர் பள்ளியில் கொலு பொம்மைகள் போன்று வேடமணிந்து பள்ளி குழந்தைகள் அசத்திய காட்சி மிகுந்த வரவேற்பை பெற்றது.இந்துக்களின் பாரம்பரிய விழாவாக நவராத்தரி விழா இந்த மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் இது குறித்து குழந்தைகளும் அறிந்து கொள்ளும் விதமாக கோவைப்புதூரில் உள்ள வித்யாஸ்ரமம் மழலையர் பள்ளியில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் தேவேந்திரன் தலைமையில் நடைபெற்ற இதற்கான ஏற்பாடுகளை வித்யாஸ்ரம் பள்ளியின் அட்மின் விப்ரஜா செய்திருந்தார்.

இதில் ,ஓர் அறிவு,ஈரறிவு என வகைப்படுத்தும் வகையில் ஊர்வனங்கள், பறவைகள், விலங்குகளின் பொம்மைகள், செட்டியார்-செட்டியம்மை மற்றும் குபேர பொம்மைகள், தலையாட்டி பொம்மைகள், சங்கீத மூவர் பொம்மைகள், ஞானிகளின் பொம்மைகள், உள்ளிட்ட பல்வேறு விதமான பொம்மைகள் வண்ணமயமாக காட்சி படுத்தப்பட்டிருந்தன.
மேலும்,விழாவில் புதுமையாக பள்ளிக்குழந்தைகள் முப்பெரும் தேவிகளின் பொம்மைகள், அஷ்டலட்சுமி அவதாரம், விஷ்ணுவின் தசவாதாரம், நவநரசிம்மர், கைலாச ஈசன், பாற்கடலில் பள்ளி கொள்ளும் விஷ்ணு, சீதா கல்யாணம், மீனாட்சி கல்யாணம் என விதவிதமான பொம்மைகள் போன்று வேடமணிந்து காட்சி அளித்தது அனைவரையும் வியக்க வைத்தது.

இது குறித்து ஆஸ்ரமம் பள்ளியின் அட்மின் உதயேந்திரன் பேசுகையில் நமது நவராத்திரி விழாவின் பாரம்பரியத்தை பள்ளி பருவத்திலேயே குழந்தைகள் அறிந்து கொள்வதற்காக இது போன்று நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.





