--- --:--:-- --

தமிழக மக்களுக்கும் ரசிகர்களுக்கும் விருதை சமர்ப்பிக்கிறேன்: ரஜினி!

Rajini 04

இந்தியத் திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை எனக்கு வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி; இந்த விருதை தமிழக மக்களுக்கும் ரசிகர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

 

இந்திய திரைத்துறையினருக்கு கிடைக்கும் கவுரவமாகவும், வாழ்நாள் அங்கீகாரமாகவும் கருதப்படுவது, தாதாசாகேப் பால்கே விருது. இந்த ஆண்டுக்கான 51ஆவது தாதாசாகேப் பால்கே விருது, நடிகர் ரஜினிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் போது, நடிகர் ர​ஜினிகாந்துக்கு இந்த விருது வழங்கப்படும். விருதுடன் சான்றிதழ் மற்றும் 10 லட்சம் ரூபாய் சன்மானமும் வழங்கப்படும்.

 

விருது அறிவிப்பினை தொடர்ந்து பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், விருது வழங்கிய மத்திய அரசு நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:

இந்தியத் திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை எனக்கு வழங்கிய மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டுவந்த பேருந்து ஓட்டுநரான எனது நண்பன் ராஜ் பகதூருக்கும், வறுமையின் பிடியில் வாடியபோது என்னை நடிகனாக்க பல தியாகங்கள் செய்த சகோதரன் சத்யநாராயணாவிற்கும் நன்றி.

 

என்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்து, இந்த ரஜினிகாந்தை உருவாக்கிய எனது இயக்குநர் பாலச்சந்தருக்கும், திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடகங்கள் மற்றும் என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள எனது ரசிக பெருமக்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்.

 

என்னை வாழ்த்திய தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவரும், நண்பருமான மு.க.ஸ்டாலின், நண்பர் கமல்ஹாசன், மத்திய, மாநில அரசியல் தலைவர்களுக்கும், நண்பர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும், என்னுடைய நலம் விரும்பிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று, ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon