புதுச்சேரியில் அமித்ஷா ‘ரோட் ஷோ’… சிலாப் உடைந்து பலர் காயம்!
புதுச்சேரியில் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக ரோட் ஷோ நடத்தி இன்று வாக்குசேகரித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேர்தல் வெற்றிக்காக சித்தானந்தர் கோயிலில் வழிபாடு முடித்து அஸ்வ பூஜை, கோ பூஜை செய்தார். இதனிடையே, கூட்ட நெரிசலில் சிலாப் உடைந்ததில் பெண்கள் காயமடைந்தனர்.
அண்டை மாநிலமான புதுச்சேரியில், வரும் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. இதில், பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று புதுச்சேரியில் ‘ரோட் ஷோ’ நடத்தி வாக்கு சேகரித்தார். லாஸ்பேட்டை சுபாஷ் சந்திரபோஸ் சிலையிலிருந்து சிவாஜி சிலை வரை திறந்த வேனில் மக்களைச் சந்தித்து வேட்பாளர்களுக்கு வாக்குச் சேகரித்தபடி செல்வதற்கான திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் பங்கேற்கும் முன்பு, கருவடிக்குப்பம் சித்தானந்தர் கோயிலுக்கு சென்று அமித்ஷா வழிபட்டார். பின்னர் அஸ்வ பூஜை, கோ பூஜை செய்து பின்னர் சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு மாலை அணிவித்தார். அதை தொடர்ந்து, பொதுமக்களை பார்த்து கை அசைத்தவாறே, அலங்கார வேனில் ஏறி, அமித்ஷா ‘ரோட் ஷோ’ சென்றார்.
அமித் ஷா வாகனத்தில் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், மேலிடப் பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா, வேட்பாளர்கள் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் உடனிருந்தனர்.
சுமார் ஒரு கி.மீ. தொலைவு ஊர்வலம் வந்தது. மகாவீர் நகர், பாரதி நகர் வீதிக்கு ஊர்வலம் வந்தபோது வாகனம் நிறுத்தப்பட்டது. அமித் ஷா சிவாஜி சிலை வரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அரை கி.மீ. முன்னதாகவே ஊர்வலம் நிறுத்தப்பட்டது. கடும் வெயில் காரணமாக பேரணியின் பாதியிலேயே இறங்கி காரில் ஏறி அமித் ஷா புறப்பட்டுச் சென்றார். அமித் ஷா பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் எங்கும் பேசவில்லை.
முன்னதாக, பேரணி தொடங்கியபோது ஏற்பட்ட நெரிசலால் சாலையோர வாய்க்கால் சிலாப் உடைந்தது. இதில் ஐந்து பெண்கள் உள்ளிட்டோர் வாய்க்காலில் விழுந்து காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.





