ஆர்.என். ரவிக்கு தி.மு.க கடும் கண்டனம்..!
சனாதன தர்மம் குறித்து தமிழக ஆளுநரின் பேச்சுக்கு திமுக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி சனாதன தர்மம் குறித்து பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆளுநரின் பேச்சுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக பொருளாளர் டி ஆர் பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட பதவியில் இருக்கும் ஒருவர் தெரிவிக்கும் கருத்து சட்டத்தின் நெறிமுறைகளுக்கு உட்பட்டதாக அமைய வேண்டுமெனவும் ஆளுநர் இப்படி பேசியது அவர் வகிக்கும் அரசியல் சட்ட பதவிக்கு இது அழகல்ல எனவும் கூறியுள்ளார்.
மேலும் ஆளுநர் உரை அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை கிழித்து எரிவதாக அமைந்துள்ளது எனவும் சமயசார்பற்ற தன்மையை பிரதிபலிக்க வேண்டிய ஒருவர் மாற்று மதத்தினரை வன்முறைப் பாதையில் எதிர் கொள்ளலாம் என பொதுவெளியில் பேசுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும் எனவும் கூறியுள்ளார்.
சமீபகாலமாக சீர்குலைவு சக்திகள் அதிகமாக தலைதூக்கி வரும் நிலையில் அத்தகையவர்களுக்கு வழிகாட்டுவதாக ஆளுநர் அவர்களின் இந்த பேச்சு அமைந்திருப்பது என கூறியுள்ள அவர் இந்தியாவை வழி நடத்துவது இந்திய அரசியலமைப்பு சட்டம் தானே தவிர சனாதன தர்மம் அல்ல எனவும் இந்தியாவில் மனுதர்மத்தின் ஆட்சி நடக்கவில்லை மக்களாட்சி நடக்கிறது எனவும் கூறியுள்ளார்.






