புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது..!
புதுச்சேரி சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டம் வருகிற நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. புதுச்சேரி அமைச்சரவை கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது.
இதில் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தாழ்த்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் வருகிற 18-ஆம் தேதி 10:15 மணிக்கு நடைபெறும் என பேரவை செயலாளர் முனுசாமி தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் மாநில அந்தஸ்து கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என தெரிகிறது. அதேநேரத்தில் அரசால் அறிவிக்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தாதது, பொங்கல் பரிசு வழங்காதது உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரியில் திமுக ஆதரவோடு காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வரும் நிலையில் காங்கிரஸ் நடத்தும் பல்வேறு போராட்டங்களை திமுகவினர் புறக்கணித்து வருகின்றனர். காங்கிரஸ் அரசியல் பலத்தை நிரூபிக்க பாஜக அதிமுக வலியுறுத்திய நிலையில் இந்த விவகாரமும் கூட்டத்தொடரில் எதிரொலிக்கும் என தெரிகிறது.






