உத்திர பிரதேசத்தில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு..!
உத்திர பிரதேசத்தில் முதல் கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. 11 மாவட்டங்களில் உள்ள 58 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு முதல் கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதற்காக நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. கடைசி நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் வாக்காளரிடம் மெய்நிகர் பரப்புரை மூலம் வாக்கு சேகரித்தார். முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 58 தொகுதிகளில் 9 தொகுதிகள் தனித்தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு ஷாம்லி, ஹாப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட தேர்தலில் மொத்தம் 673 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் .ஏறத்தாழ இரண்டு கோடியே 27 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.





