--- --:--:-- --

நீட் மறுதேர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் – தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தல்

01

நாடு முழுவதும் நாளை நீட் மறுதேர்வு நடைபெறும் நிலையில், முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 551 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் 14 நகரங்களில் நடக்கும் தேர்வை சுமார் 22 லட்சத்து 79 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

 

 

நடப்பு கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 3ஆம் தேதி நடைபெற்றது. வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டு காரணமாக இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் நாளை மறுதேர்வு நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 551 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் 14 நகரங்களில் சுமார் 22 லட்சத்து 79 ஆயிரம் மாணவர்கள் தேர்வினை எழுதி உள்ளனர். பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.

 

 

இந்த முறை எந்த முறைகேடுகளும் நடைபெறாமல் இருக்க வினாத்தாள் தயாரித்த குழுவினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், பலத்த பாதுகாப்புடன் உரிய மையங்களுக்கு வினாத்தாள் அனுப்பப்பட்டன. இந்நிலையில், நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான விரிவான வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதில் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் தங்களின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்ஆப் எண்ணான 78279 80287 என்ற எண்ணில் இருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், National testing agency என்ற பெயருக்கு அருகில் ப்ளூடிக் இடம்பெற்றிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

அனைத்து தகவல்களும் broadcast-ஆக மட்டுமே அனுப்பப்படும் என்றும், எந்தவிதமான பதிலையோ, ஓடிபி அல்லது கட்டணத்தையோ NTA கேட்காது எனவும் விளக்கம் தெளிவுப்படுத்தப்பட்டிருக்கிறது.
தேசிய தேர்வு முகமையின் அறிவுறுத்தல்களின்படி, தேர்வுக்கு வரும் மாணவர்கள் டிரான்ஸ்பரண்ட் தண்ணீர் பாட்டில் தேர்வு மையத்திற்கு எடுத்துச் செல்லலாம்.சர்க்கரை நோய் பாதிப்பு உள்ள மாணவர்கள் அதற்கான மாத்திரை மற்றும் வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை கொண்டு வரவும் அனுமதிக்கப்படுகிறது.

 

ஏற்கனவே உள்ள விதிமுறைகளின்படி செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச், ப்ளூடூத் கருவிகள், கால்குலேட்டர், மணி பர்ஸ், நகை, உலோக அணிகலன், உணவு பொட்டலங்களை எடுத்து வர அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 முதல் பகல் 1.30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் எனவும் மதியம் 1.30 மணிக்கு மேல் வருபவர்கள் எக்காரணம் கொண்டும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் யூஜி தேர்வுக்கான நுழைவு அட்டை, அடையாள அட்டை, இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் கொண்டு வர வேண்டும். அனுமதிக்கப்பட்ட உடையில் மாணவர்கள் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

எந்த விதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்றும், சந்தேகிக்கும்படியான தகவல்கள், சமூக வலைதள பதிவுகள் இருப்பின் அதுகுறித்து உடனடியாக அதிகாரிகளிடம் புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக நகர அளவிலான செயல்பாடுகளை மேற்பார்வையிட 674 நகர ஒருங்கிணைப்பாளர்கள், தேர்வு மையங்களில் 6 ஆயிரத்து 669 பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon