“போலீஸ் எஸ்.ஐ.யை காலால் எட்டி உதைத்த அதிமுக எக்ஸ் எம்.பி!!” சாமான்யர்களிடம் மட்டும் வீராப்பு காட்டும் காவல்துறை… ஆளும் கட்சி புள்ளியிடம் அடக்கி வாசித்தது ஏன்?
ஆவணங்கள் எங்கே? என கேள்வி கேட்ட போலீஸ் எஸ்.ஐ. ஒருவரை ஆபாச வார்த்தைகளால் மிரட்டும் தொனியில் திட்டி, சரமாரியாக காலால் எட்டி உதைக்கும் ஆளும் அதிமுக முன்னாள் எம்.பி., யின் அடாவடி செயல் குறித்த வீடியோ ஒன்று வைரலாகி திகிலை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினரிடம் கேள்வி கேட்ட சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை – மகனை காக்கிகள் சித்ரவதைக்கு ஆளாக்கி கொன்றதாக புகார் வாசிக்கப்படும் நிலையில், சாமான்யனிடம் மட்டும் தான் போலீசின் வீராப்பா? போலீசுக்கு உதை கொடுத்த அதிமுக எக்ஸ எம்.பி.மீது நடவடிக்கை எடுக்காமல் பம்முவது ஏன்? என்ற கேள்விக் கணைகள் எழுந்து பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்த கொடிய கொரோனா காலத்தில், கொரோனா கொடுமையை விட தமிழக காவல் துறையின் அடாவடிகள் பெருங்கொடுமையாகி விட்டது என்றே கூறலாம். ஊரடங்கு போடப்பட்ட முதல் நாளிலேயே லத்தியை கையிலெடுத்த போலீஸ்காரர்கள், சாமான்யர்களிடம் காட்டிய “வீராப்பு” சொல்லி மாளாது. அது மட்டுமின்றி ஈவு இரக்கமின்றி சில இடங்களில் நடத்திய தாக்குதல்களில் சில வெட்ட வெளிச்சத்துக்கு வந்து தமிழக காவல் துறையின் மானம் உலகெங்கும் கப்பலேறி வருகிறது.
கோவையில் வயிற்றுப் பிழைப்புக்காக நடைபாதையில். வியாபாரம் செய்த தம்பதியரை போலீஸ் அவமானப்படுத்தியதை அவர்களின் மகனான சிறுவன் தட்டிக் கேட்டான். இதனால் அந்தச் சிறுவனை சட்டை கிழியும் அளவுக்கு நையப் புடைத்த போலீசின் ஈவு, இரக்கமில்லாத செயல் கடும் கண்டத்துக்கு உள்ளானது.

இதற்கெல்லாம் உச்சகட்டமாக சாத்தான்குளத்தில் மொபைல் கடை நடத்தும் தந்தை மகனை அடித்து சித்ரவதை செய்து மாபாதக கொலையே செய்ததாக போலீஸ் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு உலக அரங்கில் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது. சாத்தான்குளம் ஜெயராஜும், அவருடைய 31 வயது மகனான பென்னிக்சும் அப்படி என்ன பெரும் குற்றம் செய்தார்கள்? ஊரடங்கு காரணமாக கடைகளுக்கு நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக கடையை திறந்து வைத்ததுதான் குற்றம்.
இதற்காக கண்டிக்கலாம், அல்லது அபராதம் விதிக்கலாம். அதை விடுத்து கடையில் இருந்த பெரியவர் ஜெயராஜிடம் போலீஸ் தாறுமாறாக எகிற, இதைப் பார்த்த ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் வாக்குவாதம் முற்றி இருவரையும் போலீசார் ஸ்டேசனுக்கு அள்ளிச் சென்றுள்ளனர். போலீசின் உச்சகட்ட சித்ரவதையில் இருவரும் பரிதாபமாக உயிரிழக்க விவகாரம் நாடு முழுவதும் தீயாய் பற்றி விட்டது.
இதனால் தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் ஏற்பட்டுள்ள தலைக்குனிவு கொஞ்ச நஞ்சமல்ல. கடைசியில் சிபிஐ விசாரணைக்கு அவசரமாக உத்தரவிடப்படும் என பணிந்துள்ளது தமிழக அரசு .சாத்தான்குளம் இரட்டை உயிரிழப்பை தொடர்ந்து கயத்தாறில் கூலித் தொழிலாளி ஒருவர், தென்காசி அருகே வி.கே.புதூரில் ஆட்டோ டிரைவர் ஒருவர் என உயிரிழப்புகள் தொடர, இதற்கும் போலீசின் அத்துமீறல் சித்ரவதை தான் காரணமாக கூறப்பட்டு போராட்டங்கள் தகிக்கின்றன.
இப்படி போலீசாரின் அடக்கு முறை, அட்டூழியங்களால் சாமான்யர்களின் உயிர்கள் மலிவாகப் போய்விட, தமிழக காவல் துறையின் மானம் கப்பலேறி நாறிக் கிடக்கிறது.
போலீஸ் எஸ்.ஐ.யை காலால் எட்டி உதைத்த அதிமுக எக்ஸ் எம்.பி வீடியோ..
இந்நிலையில், போலீஸ் எஸ்.ஐ. ஒருவரை ஆளும் அதிமுகவின் மூன்னாள் எம்.பி.யான அர்ஜுனன் காலால் எட்டி உதைப்பதும், அசிங்கமாக திட்டுவதுமான வீடியோ ஒன்று வைரலாகி காவல்துறையை மேலும் தலை குனிய வைத்துள்ளது. சேலம் அருகே சுங்கசோதனைச் சாவடியில் காரில் வந்த அர்ஜூனனை போலீசார் நிறுத்தி ஆவணங்களை கேட்டபோது தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
போலீஸ் எஸ்.ஐயிடம் ஆளும் கட்சி கோதாவில் அசிங்கமான வார்த்தைகளால் எகிறுகிறார் அர்ஜுனன். பொறுத்துப் பார்த்த எஸ்.ஐ.யும் பதிலுக்கு பேச, காரில் இருந்து இறங்கி எஸ்.ஐ.யை ஓங்கி உதை விடுகிறார் எக்ஸ் எம்.பி., அர்ஜூனன். பின்னர் மிரட்டல் விட்டு விட்டு காரில் பறக்கும் அர்ஜுனனை கைகட்டி நின்று வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள் சாமான்யனிடம் படுவீராப்பு காட்டும் போலீஸ்.
போலீஸ் எஸ்.ஐ.யை எக்ஸ் எம்.பி., அர்ஜூனன் காலால் உதைக்கும் இந்தக் காட்சிகள் படு வைரலாகி வரும் நிலையில், சாமான்யனுக்கு ஒரு நீதி.. ஆளும் கட்சி புள்ளி என்றால் ஒரு நீதியா? உதைபட்டும் காவல்துறை கைகட்டி நிற்பதேன்? இந்நேரம் அர்ஜுனன் மீது சட்டம் பாயாதது ஆளும் கட்சி புள்ளி என்பதாலா? என கேள்விக்கணைகளை பலரும் தொடுத்து வருகின்றனர். இதனால் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.






