ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்…! ஆனாலும் வேறு வழியில்லை… பிரதமர் மோடி உருக்கம்!!!
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததால் ஏழை மக்கள் படும் துயரத்தால் தம் மீது கோபம் கொண்டிருக்கலாம் என்றும் அதற்காக மன்னிப்பு கோருகிறேன் என்றும், ஆனாலும் இந்த கடுமையான நடவடிக்கை அவசியமானது என்றும் பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பேரழிவை ஏற்படுத்துவது நிச்சயம் என்ற சூழல் உருவாகத் தொடங்கியது. இதனால் கடந்த 20-ந் தேதி நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் நமக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைவது நிச்சயம். இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
எனவே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மக்கள் பொது வெளியில் நடமாடாமல் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்துவதே தீர்வு என்றார். அதற்காக பரீட்சார்த்தமாக நாட்டு மக்களே முன் வந்து ஒரு நாள் மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டுகோள் விடுத்தார். இதனால் 22-ந் தேதி நடந்த மக்கள் ஊரடங்கு வெற்றிகரமாக நடைபெற்றது.

தொடர்ந்து 24-ந் தேதி மீண்டும் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போரில் வல்லரசு நாடுகளே தத்தளிக்கின்றன. எனவே, நாம் முன் ஜாக்கிரதையுடன் இருப்பது அவசியம். என்ன பொருளாதார பாதிப்புகள் நேரிட்டாலும் சரி;நாட்டு மக்களின் உயிர் தான் முக்கியம் என 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு என்ற உத்தரவை பிறப்பித்தார்.
ஆனால், 130 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் 21 நாட்களுக்கு ஒட்டுமொத்த முடக்கம் என்பது அவ்வளவு சாத்தியமில்லாதது என்பது கடந்த நாட்களில் ஏழைகள், நடுத்தர மக்கள் திண்டாடுவதன் மூலம் தெரிகிறது. ஏழைகள், தினக்கூலிகள், வேறு மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி புலம் பெயர்ந்தவர்கள் படும் துயரங்கள் வெளிச்சத்றிற்கு வந்து பலரையும் கண்ணீர் விடச் செய்துள்ளது.
இந்நிலையில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கழமை நாட்டு மக்களிடம் வானொலி மூலம் மன் கீ பாத்(மனிதன் குரல்) நிகழ்ச்சியில் உரையாற்றும் பிரதமர் மோடி இன்று தனது உரையில் மிகவும் உருக்கமாக பேசினார்.
அதில், ஊரடங்கு உத்தரவால் ஏழைகள் படும் துயரத்தால் என் மீது கோபம் கொண்டிருக்கலாம். அதற்காக மன்னிப்பு கோருகிறேன்,வீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை.

கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
கொரோனாவுக்கு எதிரான போரில், மக்களுக்காக சேவை செய்பவர்கள் ஹீரோக்கள். கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெற சில கட்டுப்பாடுகள் அவசியம். விதிகளை மீறி வீடுகளை விட்டு வெளியே வரும் சிலரால் கொரோனா ஆபத்தில் இருந்து தப்ப முடியாது. எனவே அரசின் உத்தரவுகளை தற்போது பின்பற்றுவது மிகவும் அவசியம்.
விதிகளை மீறுபவர்கள் உயிரோடு விளையாடுகின்றனர் என்பதே அர்த்தம். மக்களை தனிமைப்படுத்துவதே கொரோனாவை கட்டுப்படுத்தத் தான். இந்த சூழலில் இதை விட்டால் வேறு வழியில்லை என பிரதமர் மோடி மனிதன் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.







