கொரோனா தடுப்பு நடவடிக்கை : அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!!
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி முதன் முறையாக ஆலோசனை நடத்தினார்.
பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலக அளவில் பலி எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்து இன்று 83 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஈரான், ஜெர்மனி, ஹாலந்து உள்ளிட்ட நாடுகளில் கொத்து கொத்தாக உயிர்களை காவு வாங்குகிறது கொரோனா வைரஸ்.
இந்நிலையில் இந்தியாவிலும் கொரோணா வைரஸ் பரவல், கடந்த இரு வாரங்களாக விஸ்வரூபமெடுத்து வருகிறது.நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்து 5124 ஆகவும், பலி எண்ணிக்கையும் 149 ஆக உயர்ந்துள்ளது.நாட்டில் போதிய பரிசோதனைக் கருவிகள் இல்லாத நிலையில், அதிகம் பேருக்கு கொரோனா சோதனை நடத்துவதில் தாமதம் ஆகி வரும் நிலையில், வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். நாடாளுமன்ற இரு அவைகளில் 5 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டிருந்தது. இந்தக் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
இதில் காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத்,திமுக சார்பில் டி.ஆர்.பாலு, அதிமுக சார்பில் நவநீதி கிருஷ்ணன் மற்றும் திரிணாமூல், பகுஜன் சமாஜ், டி.ஆர்.எஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் கொரோனா னவரஸ் பரவலை கட்டுப்படுத்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை பிரதமர் மோடி கேட்டறிந்ததுடன், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் யோசனைகளை கேட்டதாக கூறப்படுகிறது.
மேலும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்திய எதிர்க்கட்சிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான செலவுக்கு எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை . 2 ஆண்டுகளுக்கு ரத்து செய்ததற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.






