திருவண்ணாமலை கோயிலில் மலையேற பக்தர்களுக்கு அனுமதி?
சான்றோர்களால் தொடங்கப்பட்ட திருவண்ணாமலை கார்த்திகை தீபம், சிறு அசம்பாவிதமும் ஏற்படாமல் இந்தாண்டும் மலையின் உச்சியின் மேல் எரியும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கேள்வி பதில் நேரத்தில், திருவண்ணாமலை தீபம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
உறுப்பினர் பிச்சாண்டி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ““சங்க காலத்தில் இருந்து தீபத் திருவிழா நடந்து வருவது வழக்கத்தில் இருக்கும் ஒன்று”” எனவும், இந்த ஆண்டு திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு 40 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும் தீபத் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி துணை முதலமைச்சரே நேரில் ஆய்வு செய்தார். அதன் தொடர்ச்சியாக மாவட்ட அமைச்சரான எ.வ வேலு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் 6 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட பெரும் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவின் பாதிப்புகளைப் போர்க்கால அடிப்படையில் தீர்வு காணப்பட்டுள்ளது. சான்றோர்கள் காலத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த தீப விழா தடைப்படக் கூடாது என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தீபத் திருவிழாவின் போது மலை மீது மக்கள் அனுமதிப்பது குறித்து Geology நிபுணர் சரவண பெருமாள் ராஜா தலைமையில் 8 பேர் கொண்ட நிபுணர்கள் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளித்துள்ளார்கள்.
அந்த அறிக்கையின் படி தீபத் திருவிழாவிற்குப் பயன்படுத்தப்படும் 350 கிலோ கொப்பரைத் திரி, 450 கிலோ நெய் மேலே எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு எவ்வளவு மனித சக்திகள் தேவைப்படுமோ, அவ்வளவு மனித சக்திகளைப் பயன்படுத்தப்படும். எந்தவிதமான உயிரிழப்புகளும், சிறு அசம்பாவிதமும் ஏற்படாமல் நடத்த வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சூழ்நிலைகளுக்கு ஏற்ப மனித சக்திகளைப் பயன்படுத்தி, சான்றோர்களால் தொடங்கப்பட்ட இந்த கார்த்திகை தீபம் இந்த ஆண்டும் மலையின் உச்சியின் மேல் எரியும் எனத் தெரிவித்தார்.





