தமிழகம் முழுவதும் சிறு வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி..!
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் இருக்கும் மாநகராட்சிகளில் வரும் பத்தாம் தேதி முதல் சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரொனா பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.
கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிளிலிருக்கும் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் இருக்கும் மாநகராட்சிகளில் வழிபாட்டுத் தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
அதன்படி ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு குறைவான வருமானம் உள்ள கோவில்கள், மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள் மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் திறக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் மாநகராட்சி ஆணையரிடம் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளை வரும் 10ஆம் தேதி முதல் திறந்து கொள்ளவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.







