சீன தலைநகர் பெய்ஜிங்கில் மக்கள் முகக்கவசம் அணிய கட்டாயம் இல்லை..!
கொரோனா வைரஸ் தொற்றின் விழுக்காடு குறைந்துள்ளதால் சீன தலைநகர் பெய்ஜிங்கில் மக்கள் முக கவசம் அணிவது கட்டாயம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது.
சீனாவின் வுகாண் நகரத்திலிருந்து வெடித்துக் கிளம்பிய கொரோனா வைரஸ் பிற நகரங்களை போல் தலைநகர் பெய்ஜிங்கிலும் பரவியது. மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து பெய்ஜிங்கில் வைரஸ் பரவல் பெருமளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஏழு மாதங்களுக்குப் பிறகு கடந்த இரண்டு வாரங்களாக அந்த நகரத்தில் புதிதாக யாருக்கும் கொரொனா தொற்று ஏற்படவில்லை. இதையடுத்து முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளை சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் படிப்படியாக தளர்த்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக வெளியிடங்களுக்கு பொதுமக்கள் செல்லும்போது முக கவசம் அணிதல் கட்டாயமில்லை என்று பெய்ஜிங் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் சீனாவில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக நகர எல்லைகள் மூடப்பட்டுள்ளன.







