ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இந்தியாவிற்கான முதல் கொரோனா தடுப்பூசி..!
கொரொனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவைப் பொறுத்தவரை மூன்று தடுப்பூசிகள் மனிதர்கள் மீதான பரிசோதனையில் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரொனா தடுப்பூசி உள்நாட்டில் உருவாக்கப்பட்ட மற்ற இரண்டு தடுப்பூசிகளை விட முன்னணியில் உள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துடன் சேர்ந்து கோவிஷீல்டு மருந்தை தயாரித்துள்ள அஷ்ட்ரா ஜெனிகாவுடன் புனேவை தலைமை இடமாக கொண்ட சீரம் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட நாட்டின் 17 இடங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்து 600 பேர் பங்கு பெறும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது.
முதலில் இரண்டு கட்ட சோதனைகளில் இந்த தடுப்பூசி முதல் 14 நாட்களில் டி செல்லை தூண்டியதாகவும், 28 நாட்களுக்குள் ஆன்டிபாடிகளை உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவிற்கு வெளியே உருவாக்கப்பட்டதில் மற்ற தடுப்பூசிகளை காட்டிலும் கோவிஷீல்டு அதிக அளவில் பரிசோதிக்கப்படுவதுடன் சாதகமான முடிவுகளையும் வழங்கி வருகிறது.
மேலும் அதன் உற்பத்தி மற்றும் விநியோக உரிமையை இந்திய நிறுவனம் பெற்றிருப்பதால் நடப்பு ஆண்டு இறுதிக்குள் இந்தியாவிற்கு கிடைக்கக்கூடிய முதல் தடுப்பூசி ஆக கோவிஷீல்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
பாரத் பயோடெக் மற்றும் ஐசிஎம்ஆர் இணைந்து உருவாக்கிய உள்நாட்டு கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் ஆன கோவாக்ஸின் மற்றும் சைடாஸ் காடில்லாஸ் ஜிக்கோ டி ஆகியவை மருத்துவப் பரிசோதனைகளின் ஆரம்ப கட்டங்களில் உள்ளன.







