--- --:--:-- --

அரசு வேலைகளில் திருநங்கைகளுக்கு தனி இடஒதுக்கீடா?

3

சென்னை உயர் நீதிமன்றம், அரசுப் பணிகளில் திருநங்கைகளுக்குக் கிடைமட்ட இடஒதுக்கீடு வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக, தமிழ்நாடு அரசுக்கு 2026 ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

 

 

அனைத்து குடிமைப் பணிகள் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் திருநங்கைகளுக்கு ஒன்று அல்லது இரண்டு சதவீத கிடைமட்ட இடஒதுக்கீடு வழங்க அரசு திட்டமிட்டுள்ளதா என்பதைத் தெளிவுபடுத்துமாறு, ஜூலை 15 சென்னை உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. அண்டை மாநிலமான கர்நாடக அரசு, அனைத்து சிவில் சர்வீசஸ் மற்றும் அரசுப் பணிகளிலும் திருநங்கைகளுக்கு 1 சதவீத கிடைமட்ட இடஒதுக்கீட்டை ஏற்கனவே வழங்கியுள்ளதாகவும், அதே போன்றதொரு நடைமுறையைத் தமிழ்நாடும் பின்பற்றலாம் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இந்த கால அவகாசத்தை இரண்டாவது டிவிஷன் பெஞ்ச் வழங்கியது.

 

 

அரசுப் பணிகளில் திருநங்கைகளை ஒரு தனிப் பிரிவாகக் கருதி அவர்களுக்குக் கிடைமட்ட இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி வி. பவானி சுப்பராயன் முன்பு உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு கடந்த 2024ஆம் ஆண்டில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போதுதான் இந்த வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆர். அனுஸ்ரீ என்ற பொறியியல் பட்டதாரி தாக்கல் செய்திருந்த மனுவை அனுமதித்துதான், தனி நீதிபதி அந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் II-A ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தேர்வில் பங்கேற்ற தனக்கு, தகுதியிருந்தும் வேலை மறுக்கப்பட்டதாக அனுஸ்ரீ வழக்குத் தொடர்ந்திருந்தார்.

 

 

இந்த வழக்கின் விசாரணையின்போது, மனுதாரரின் விண்ணப்பத்தைப் பட்டியலினப் பெண் பிரிவின் கீழ் பரிசீலித்ததாக டி.என்.பி.எஸ்.சி நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும், பட்டியலினப் பெண்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 222 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், மனுதாரர் 121.50 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருந்ததால் அவரது விண்ணப்பத்தைப் பரிசீலிக்க முடியவில்லை என்றும் தேர்வாணையம் குறிப்பிட்டிருந்தது.

 

 

இருப்பினும், திருநங்கைகளை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவிலோ அல்லது பட்டியலின/பழங்குடியின பிரிவிலோ சேர்த்து செங்குத்து இடஒதுக்கீடு வழங்கும் தற்போதைய நடைமுறைக்குத் தனது கண்டனத்தைத் தெரிவித்த நீதிபதி பவானி சுப்பராயன், அவர்களுக்குக் கண்டிப்பாகக் கிடைமட்ட இடஒதுக்கீட்டுப் பலன்கள் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். கடந்த 2014ஆம் ஆண்டு தேசிய சட்ட சேவைகள் ஆணையம் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அவர் சுட்டிக்காட்டினார். அதில், திருநங்கைகளைச் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினராகக் கருதி, கல்வி மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்புகளில் அனைத்து வகையான இடஒதுக்கீடுகளையும் விரிவுபடுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

 

 

ஆனால், இந்த உத்தரவை மாநில அரசுகள் பல நேரங்களில் தவறாகப் புரிந்துகொண்டு, திருநங்கைகளுக்கு எது சாதகமாக இருக்குமோ அதற்கேற்ப அவர்களை எம்பிசி அல்லது எஸ்சி/எஸ்டி பிரிவின் கீழ் வைப்பதாக நீதிபதி அவதானித்தார். இது உச்ச நீதிமன்றத்தின் நோக்கம் அல்ல என்று குறிப்பிட்ட அவர், வயது வரம்பு தளர்வு மற்றும் பிற வேட்பாளர்களை விடக் குறைவான கட்-ஆஃப் மதிப்பெண்கள் போன்ற சலுகைகளுடன் அரசுப் பணிகளில் திருநங்கைகளுக்கு பிரத்யேக கிடைமட்ட இடஒதுக்கீட்டை வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்தே 2024இல் அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

 

 

இந்த மேல்முறையீட்டு மனுவானது, திருநங்கைகளுக்கான பிரத்யேக இடஒதுக்கீட்டை வலியுறுத்தி திருநங்கை ஆர்வலர் கிரேஸ் பானு கணேசன் மற்றும் பலர் தொடர்ந்த தனிப்பட்ட மனுக்களுடன் சேர்த்து ஒருங்கிணைக்கப்பட்டது. தொடர்ந்து, 2025ஆம் ஆண்டில் அப்போதைய அரசுத் தலைமை வழக்கறிஞர், இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்று நீதிமன்றத்தில் உறுதியளித்திருந்தார்.

 

 

அதன்பிறகு, இந்த வழக்குகள் நீண்ட நாட்களாக விசாரணைக்கு வராமல் இருந்த நிலையில், ஜூலை 15 நீதிபதி சுப்பிரமணியம் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் இதனை மீண்டும் விசாரணைக்கு எடுத்தது. அதற்குள், நடப்பு ஆண்டின் மே மாதம் வெளியான சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி மாநிலத்தில் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon