கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்த ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள்..? நாளை முதல் மனிதர்களிடம் சோதிக்க முடிவு!!
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடித்துள்ளதாக அறிவித்துள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள், நாளை முதல் மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
உலகை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி அனைத்து நாடுகளையும் ஒட்டு மொத்தமாக முடக்கிப் போட்டு அச்சத்திலும், பீதியிலும் உறையச் செய்துள்ளது கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ்.கடந்த நூற்றாண்டில் இரு பெரும் உலகப் போர்கள் ஆண்டுக் கணக்கில் நடந்த போது கூட, உலக நாடுகளில் இந்த அளவுக்கு பதற்றம் ஏற்பட்டிருக்காது என்ற அளவுக்கு, கொரோனா தாக்குதலால் பெரும் வல்லரசு நாடுகள் கூட மிரண்டு போயுள்ளன.
இதில் உலகப் போர்களில் பெரும் பங்கு வகித்த இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் மட்டுமின்றி உலகின் மாபெரும் வல்லரசான அமெரிக்கா படும் பாடுதான் பெரும் திண்டாட்டம் எனலாம். அமெரிக்க வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப் பெரும் பேரழிவை கொரோனா பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. உலகின் மொத்த பாதிப்பில் 3-ல் ஒரு பங்காகவும், உயிரிழப்பில் 4-ல் ஒரு பங்காகவும் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தில் உள்ளது.
இப்படி உலக நாடுகளை கடும் பீதியிலும், அதிர்ச்சியிலும் உறைய வைத்துள்ள இந்த கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸை கொன்றொழிக்கும் மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் இந்த வைரஸ் மேலும் பரவாமல் இருக்க ஒரே தீர்வாக, இப்போது உலக நாடுகள் அத்துணையும் லாக் டவுன் என்னும் ஊரடங்கை பிறப்பித்து மக்களை வெளியில் நடமாட தடை விதித்துள்ளன. இதனால் ஏற்படும் விளைவுகள் தான் கொரோனா பாதிப்பை விட மிக மோசமாகி வருகிறது. உற்பத்தி பாதிப்பு, வேலையின்மை, பொருளாதார சீர்குலைவு போன்றவற்றால், மக்களின் வாழ்வாதார மே கேள்விக்குறியாகியுள்ளது.
இதனால், கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை விரைந்து கண்டு பிடிக்க, உலகின் பல நாட்டு விஞ்ஞானிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தான் பிரிட்டனில் உள்ள மிகப் புகழ் பெற்ற மற்றும் பழமையான ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த தடுப்பு மருந்தை நாளை முதல் மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்து பார்க்கப் போவதாகவும் ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால் கொரோனா கொடுமைக்கு முடிவு ஏற்படலாம் என்பதால், உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.







