--- --:--:-- --

ஏழை,, எளியவர்களுக்கானது அதிமுக அரசு… ஓ.பி.எஸ். பிரசாரம்

OPS 03

ஏழை எளியவர்களின் நலனுக்காக செயல்படுவது அதிமுக அரசு. பெண்களுக்கான சமூகப் பாதுகாப்பு மட்டுமில்லாது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் அதிமுக அரசு பாடுபடுவதாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் பிரசாரம் செய்தார்.

 

மதுரை மாவட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார். செல்லம்பட்டி பேருந்து நிலையம், அய்யர் பங்களா, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்து பேசியதாவது:

 

கடந்த 2006-ம் ஆண்டில் ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட்டு, திமுக ஆட்சியைப் பிடித்தது. அதில், 2 ஏக்கர் நிலம் தருவார்கள் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால், தற்போது வரை தரவில்லை. இதை நாங்கள் சட்டப்பேரவையில் எதிர் வரிசையில் அமர்ந்திருந்த கருணாநிதியிடம் கேட்டோம். அவர் உடனே கோபப்பட்டு எழுந்து சென்றுவிட்டார்.

 

இப்போதும் ஒரு பொய்யான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள். திமுகவின் இந்தத் தேர்தல் அறிக்கை கள்ள நோட்டு. அது ஒரு போதும் செல்லாது. ஆனால், அதிமுக தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு. அது எப்போதும் செல்லும்.

 

அதிமுக அரசு தொலைநோக்குப் பார்வையுடன் நல்ல பல திட்டங்களைத் தந்துள்ளது. அதனால், 50 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் நமது எதிர்காலச் சந்ததியினரும் இந்தத் திட்டங்களால் பலனடைவார்கள். பெண்கள் நாட்டின் கண்கள். பெண்களுக்கான ஏராளமான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அதிமுக நடைமுறைப்படுத்தியுள்ளது. பெண்கள் முன்னேற்றத்திற்காகச் சொன்னதை முழுமையாகச் செய்தோம். தற்போது சொல்லாததையும் செய்கிறோம்.

 

ஏழை, எளிய மக்களுக்கு எது தேவை, எந்தத் திட்டம் தந்தால் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று அறிந்து அதைத் தருகிற அரசாக அதிமுக அரசு செயல்படுகிறது. ஏழை, எளிய மாணவர்களுக்கு 14 வகை கல்வி உபகரணங்களை வழங்கி அவர்களைப் பட்டம் பெற வைத்துள்ளோம் என்று ஓ.பி.எஸ். பேசினார்.

Leave a Reply

Right Menu Icon