ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே… தேர்தல் நேரத்தில் அரசு அறிவித்ததால் சர்ச்சை!!
இந்தியத் திரைப்படத்துறையில் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதை நடிகர் ரஜினிகாந்திற்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இந்திய அளவில் பிரபலமானவர். தமிழ் தவிர கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். 70 வயதாகும் ரஜினியின் கலைச்சேவையை கவுரவிக்கும் வகையில் ஏற்கனவே பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது.
இந்நிலையில், 51-வது தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்திற்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்வீட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
இந்தியத் திரைத்துறை வரலாற்றில் மிகப்பெரிய நடிகர்களுள் ஒருவரான ரஜினிகாந்துக்கு இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வாகி இருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியராக அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. நடுவர் குழுவில் இருந்த ஆஷா போன்ஸ்லே, சுபாஷ்கை, மோகன்லால், சங்கர், பிஸ்வஜித் சாட்டர்ஜிக்கு நன்றி. என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பழம்பெரும் பாலிவுட் நடிகர்கள் திலீப்குமார், சசிகபூர், வினோத் கன்னா, அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். தமிழகத்தில் நடிகர் சிவாஜி கணேசன் (1996), இயக்குநர் பாலசந்தர் (2010) ஆகியோர் இந்த விருதினைப் பெற்றுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து ரஜினிகாந்துக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தாதா சாகேப் பால்கே விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவருடைய ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலருமே மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள். மேலும், பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் ரஜினிகாந்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது தங்களது நடிப்புத்திறமைக்கும், கடின உழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரம் என ரஜினிக்கு முதல்வர் பழனிச்சாமி பாராட்டினார்.
திமுக தலைவர் ஸ்டாலின் தனது வாழ்த்தில், “இன்றும் என்றும் இனிய நண்பரும் – தமிழ்த் திரையுலகில் தன்னிகரற்ற கலைஞனுமாகிய ரஜினிகாந்த் அவர்களுக்கு, ‘தாதா சாகேப் பால்கே விருது’ கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். எப்போதோ அவருக்கு இந்த விருது தரப்பட்டிருக்க வேண்டும். தாமதமாகத் தரப்பட்டுள்ளது. நடிப்பில் மட்டுமல்ல நட்பிலும் இலக்கணமான ரஜினி அவர்களை வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். அவரது கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடரட்டும். தமிழ்த்திரை, நண்பர் ரஜினி அவர்களால் செழிக்கட்டும்.” என பாராட்டியுள்ளார்.
மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது 100% பொருத்தம் என்று கூறியுள்ளார்.
இதனிடையே, தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும், ரஜினி ரசிகர்களின் ஆதரவை பெறவே மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் ஜவடேகர், ஐந்து பேர் கொண்ட நடுவர் மன்றம் கூட்டாக ரஜினிகாந்தின் பெயரை முடிவு செய்தது, இதில் அரசியல் எங்கிருந்து வந்தது? ரஜினிகாந்த் கடந்த 50 ஆண்டுகளில் சினிமா உலகை ஆளுகிறார், மக்களை மகிழ்விக்கிறார் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




