அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ்-க்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம்..!
எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச்செயலாளராக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொது செயலாளர் என்பதற்கான ஆவணங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
மேலும் எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
அதிமுகவின் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி இருப்பார் என கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற பொது குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து ஜூலை 11 இல் நடைபெற்ற மற்றொரு பொது குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நகர்வுகளையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நீதிமன்றங்களை நாடியது. இருதரப்பும் நீண்ட போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அறிவித்த பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி அறிவித்தது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் முடிவை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டவுடன் உட்கட்சி தேர்தல் முடிவில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்களையும் இணையதளத்தில் பதிவிட்டுள்ளது.





