ரூ.1000கோடி இழப்பீடு கேட்டு பாபா ராம்தேவ்க்கு நோட்டீஸ்..!
அலோபதி மருத்துவம் மற்றும் மருத்துவர்களுக்கு எதிராக அவதூறாக கருத்துக்களை பேசியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பை அடுத்த 15 நாட்களுக்குள் யோகா குரு பாபா ராம்தேவ் கேட்காவிடில் ஆயிரம் கோடி ரூபாய் தரவேண்டும் என இந்திய மருத்துவ கூட்டமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அலோபதி மருத்துவம் குறித்த பாபா ராம்தேவ் அவதூறாக பேசிய வீடியோ வெளியாகி இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தனது கருத்தை திரும்பப் பெற்று தான் பேசியதற்கு பாபா ராம்தேவ் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உத்தரகாண்டில் உள்ள இந்திய மருத்துவ கூட்டமைப்பு தனியாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அலோபதி மருத்துவம் குறித்து அவர் பேசிய கருத்தை திரும்பப் பெற்று வீடியோ வெளியிட வேண்டும் எனவும் 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இல்லாவிட்டால் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரொனா கிட் குறித்து தவறான புரிதலை உண்டாக்கும் வகையில் செய்து வரும் விளம்பரத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் இல்லாவிட்டால் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






