“அண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையேயில்லை!!” தமிழக அரசின் முடிவால் துணைவேந்தர் சூரப்பா பதவிக்கு “சிக்கல்”
அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து கொடுக்க தேவையில்லை என அரசு முடிவு செய்திருப்பதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். உயர் சிறப்பு அந்தஸ்து கொடுத்து 69% இட ஒதுக்கீட்டை கேள்விக்குறியாக்கும்; கல்விக் கட்டணமும் உயரும் என்பதால், ஏற்கனவே நல்ல அந்தஸ்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உயர் அந்தஸ்து என்ற பெயரில் சலுகைகளை இழக்க தயாரில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளர். இதனால் இந்த விவகாரத்தில் தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய துணைவேந்தர் சூரப்பாவின் பதவி பறிபோகும் அபாயம் அதிகரித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குமாறு தமிழக அரசை ஆலோசிக்காமலே துணை வேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அப்படி சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் கல்விக் கட்டணம் உயருவதோடு இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் என்பதால் சூரப்பா பதவி விலக வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் திமுக இளைஞரணி சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டது. தமிழக அரசிடம் கலந்தாலோசிக்காமல் சூரப்பா தன்னிச்சையாக செயல்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாகி தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் இன்று தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியதாவது: அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என அரசு முடிவு செய்துள்ளது. சிறப்பு அந்தஸ்து வந்தால் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு, கூடுதல் கல்விக்கட்டணம் வர வாய்ப்பு நேரிடும்.
அதுமட்டுமில்லாமல், மாணவர்களுக்கான 69% இடஒதுக்கீடு கேள்விக்குறியாகும். இந்தப் பிரச்னைகள் வரக்கூடாது என்பதற்காகவே சிறப்பு அந்தஸ்தை வேண்டாம் என அரசு முடிவெடுத்திருப்பதாக அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்தார். மேலும் துணைவேந்தர் சூரப்பா தன்னிச்சையாக கடிதம் எழுதியது குறித்து அரசு உரிய முடிவெடுக்கும் எனவும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். இதனால் அவரை பதவி நீக்கம் செய்ய ஆளுருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கும் எனவும் தெரிகிறது.






