--- --:--:-- --

சீனாவில் இன்று புத்தாண்டு கொண்டாட்டம்!

1

சீனாவில் பாரம்பரிய லூனார் நாட்காட்டியின் படி ஒவ்வொரு ஆண்டும் ஒரு விலங்கின் அடிப்படையில் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு எலி ஆண்டாக அமைந்துள்ளது. சீன நாட்காட்டியில் உள்ள 12 விலங்கு ராசிகளில் எலியும் ஒன்று. இதனை செல்வம் மற்றும் வளத்தின் சின்னமாக சீனர்கள் கருதுகின்றனர்.

 

லூனார் புத்தாண்டை உலகம் முழுவதும் உள்ள சீனர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். 2020 ஆம் ஆண்டில் லூனார் புத்தாண்டு இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் சீனாவின் முக்கிய நகரங்கள் மின்னொளியில் மிதக்கின்றன. ஒரு பக்கம் கொரானா வைரஸ் பாதிப்பால் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், மறுபக்கம் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.

 

சாங்ஸ் மாகாணத்தில் பொம்மைகள், ராட்சத மாடமாளிகைகள், ஒளி வெள்ளத்தில் மிதக்கும் காட்சி கண்களை கொள்ளை கொண்டன. புத்தாண்டை வரவேற்கும் விதமாக அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் சீனர்கள் ஒன்றுகூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மின் விளக்குகளைக் கொண்டு கண்கவர் வண்ணங்களில் அலங்காரங்கள் செய்யப்பட்டன.

கம்போடியாவில் லூனார் புத்தாண்டையொட்டி அலங்காரப் பொருட்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. இன்று புத்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி டிராகன் பொம்மைகளுடன் மாணவர்கள் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். இதுமட்டுமின்றி தாய்லாந்து, கொரியா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் சீனர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

 

புத்தாண்டைக் கொண்டாட உலகம் முழுவதிலுமிருந்து சீனர்கள் தாயகத்திற்கு பயணம் செய்ய தொடங்கியுள்ளதால் விமான ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதுவரை சுமார் 50 கோடிக்கும் அதிகமான சீனர்கள் சொந்த ஊருக்கு படையெடுத்துள்ளனர். உலகிலேயே பண்டிகைக்கு அதிகம் பேர் பயணப்படுவது சீன புத்தாண்டில் மட்டுமே. வழக்கமாக சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டம் இந்த ஆண்டு வைரஸ் பாதிப்பால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷாங்காய் டிஸ்னிலேண்ட் மூடப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பால் சோர்ந்துபோய் இருந்தாலும் இன்று கொண்டாடப்பட உள்ள புத்தாண்டு சீனர்களின் மகிழ்ச்சி தீயை பற்ற வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon