--- --:--:-- --

ஈரமான பிட்ச்சை ‘ஹேர் டிரையர்’ ‘அயன் பாக்ஸ்’ மூலம் உலர்த்த முடியுமா..? கோடிகளில் புரளும் கிரிக்கெட்டில் நடந்த கூத்து!!

IMG-20200106-WA0127

மழையால் பிட்ச் ஈரமாக, அதனை ஹேர் டிரையர்,அயன்பாக்ஸ், வாக்குவம் கிளீனர் கொண்டு உலர்த்த முயற்சி எடுத்த கிரிக்கெட் மைதான நிர்வாகிகளை நெட்டிசன்கள் ஏகத்துக்கும் கலாய்த்து வருகின்றனர்.

 

இந்தியாவில் மட்டுமின்றி பல நாடுகளும் கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதால் கோடிகளில் புரளும் விளையாட்டாக பிரபலமாகி விட்டது. இதனால் நவீன வசதிகளுடன் கிரிக்கெட் மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மழை பெய்து மைதானம் ஈரமானால், அதனை சில நிமிடங்களில் உலரச் செய்யவும் நவீன எந்திரங்கள் பல அறிமுகமாகி விட்டன.

 

ஆனால் இந்த நவீன வசதிகளுக்கு நாம் மாறவில்லையோ? இன்னும் ஹைதர் அலி காலத்தில் தான் உள்ளோமோ? என்பதற்கு எடுத்துக் காட்டான ஒரு கூத்து அரங்கேறி கிரிக்கெட் ரசிகர்களிடையே கிண்டலுக்கும், கேலிக்கும், கோபத்துக்கும் ஆளாகியுள்ளது.

 

கவுகாத்தியில் இந்தியா – இலங்கை இடையேயான முதலாவது டி20 போட்டியில் தான் இந்தக் கூத்து நடந்தேறியுள்ளது. நேற்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குவதற்கு முன்னரே மழை கொட்டித்தீர்த்து விட்டது. எவ்வளவு மழை பெய்தாலும் கிரிக்கெட் மைதானங்களில் உள்ள பிட்சையும் அதைச் சுற்றியுள்ள முக்கிய பகுதிகளையும் ஈரம் படாமல் கவனமாக பாதுகாத்து விடுவார்கள்.

 

இதற்காக, மழை வந்தவுடன் பெரிய பெரிய தார்ப்பாய்களை ஊழியர்கள் அவசரமாக இழுத்துச் செல்வதை டி.வி. நேரலைகளில் நாம் பார்ப்பதுண்டு.

 

ஆனால் கவுகாத்தி மைதானத்தில் கிழிந்த நைந்து போன தார்ப்பாயால் மூட, மழை நீர் பொத்துக் கொண்டு பிட்ச்சை ஈரமாக்கி விட்டது. இதனால் மழை நின்றும் ஆட்டத்தை தொடங்க முடியவில்லை. ஈரத்தை உலர வைக்க நவீன சாதனங்களும் கைவசம் இல்லாத நிலையில், நம்ம ஆட்கள் செய்தது என்ன தெரியுமா? அது தான் கொடுமையிலும் கொடுமை.

நாம் வீட்டில் துணியை தேய்க்கும் அயர்ன் பாக்ஸ், முடியை உலர்த்தும் ஹேர் டிரையர், தூசியை அகற்றும் வாக்குவம் கிளீனர் போன்றவற்றைக் கொண்டு பிட்சையும், மைதானத்தையும் உலரச் செய்ய முயற்சித்தனர். ஆனாம் அம்மாம் பெரிய்ய மைதானத்தை இம்மாந்துண்டு எந்திரங்களால் உலரச் செய்வது என்பது நடக்கக்கூடிய காரியா இது?

 

எவ்வளவோ படாதபாடு பட்டு முயற்சித்தும் ஈரம் உலராததால், கடைசியில் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கடைசி வரை பொறுமையாக காத்திருந்த 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் , ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி ரத்து செய்யப்பட்டவுடன் அதிருப்தியில் வெளியேறினர்.

 

பல கோடிகளில் புரளும் கிரிக்கெட்டில், இப்படி ஹைதர் அலி காலத்து பணியை கடைப்பிடித்தது குறித்து நெட்டிசன்கள் பலரும் கிரிக்கெட் நிர்வாகிகளை, கிண்டல், கேலி செய்து பாடாய் படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon