நீட் தேர்வு ஆள்மாறாட்டம் : புகைப்படத்தை வைத்து மாணவர்களின் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை..!
நீட் தேர்வு ஆள்மாறாட்டம் முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியிடப்பட்ட 10 மாணவ, மாணவிகளின் புகைப்படங்களைக் கொண்டு அவர்களது விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என ஆதார ஆணையம் பதிலளித்து இருப்பதாக சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து தொடர்பாக 2 வழக்குகளை சிபிசிஐடி காவல்துறையினர் பதிவு செய்தனர். மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் என 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் மோசடி செய்து தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் 10 பேரின் புகைப்படங்களை சிபிசிஐடி காவல்துறையினர் வெளியிட்டனர்.
அவர்கள் குறித்து தெரிய வந்தால் தகவல் கொடுக்குமாறு பொதுமக்களின் உதவியை நாடிய காவல்துறையினர் பத்து பேரின் புகைப்படங்களை வைத்து விபரங்களைக் கொடுக்குமாறு பெங்களூருவில் உள்ள ஆதார ஆணையத்திற்கு கடிதம் எழுதினர்.
இந்நிலையில் புகைப்படத்தில் இருப்பவர்களை தங்களிடம் உள்ள தரவுகளின் மூலம் கண்டுபிடிக்க முடியவில்லை என ஆதார ஆணையம் தெரிவித்துள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி தலைமறைவாக உள்ள இடைத்தரகர் ரஷீத் என்பவரை தீவிரமாக தேடி வருவதாக சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.







