தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு..!
சென்னை சென்ட்ரல் – கூடூர் வழித்தடத்திலுள்ள கும்மிடிபூண்டி யார்டில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஜூலை 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பல மின்சார ரயில் சேவைகளை முழுமையாகவும் பகுதியளவிலும் தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. இதனால், ஞாயிற்றுக்கிழமை வெளியூர் சென்றுவிட்டு திரும்பும் பயணிகள் சிரமத்தை சந்திக்கக்கூடும். ஜூலை 26-ஆம் தேதி இரவு 8 மணி முதல் ஜூலை 27-ஆம் தேதி அதிகாலை 1 மணி வரை வழித்தட அடைப்பு மற்றும் மின்சார தடை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, ஜூலை 26 அன்று மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் – சூளூர்பேட்டை , சூளூர்பேட்டை – நெல்லூர், நெல்லூர் – சூளூர்பேட்டை, சூளூர்பேட்டை – மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ், மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் – ஆவடி ஆகிய 5 மின்சார ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூலை 26 அன்று 11 இ.எம்.யு ரயில் சேவைகளும், ஜூலை 27 அன்று 4 இ.எம்.யு சேவைகளும் எண்ணூர், மிஞ்சூர், பொன்னேரி, கும்மிடிபூண்டி மற்றும் தாம்பரம் ஆகிய நிலையங்களுக்கு இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் – கும்மிடிபூண்டி, சென்னை கடற்கரை – கும்மிடிபூண்டி , கும்மிடிபூண்டி – மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் , கும்மிடிபூண்டி – சென்னை கடற்கரை, கும்மிடிபூண்டி – செங்கல்பட்டு ஆகியவை அடங்கும்.






