இனி அரசியலில் தலையிட மாட்டேன்: ராமதாஸ் அறிவிப்பு
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வந்தது. குறிப்பாக, கட்சியின் தலைமை மற்றும் நிர்வாக முடிவுகள் தொடர்பாக கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவியது. அதைத் தொடர்ந்து “கட்சியின் தலைவராகத் தன்னை அறிவிக்க வேண்டும், பா.ம.க-வின் பெயர், கொடி மற்றும் ‘மாம்பழம்’ சின்னத்தை அன்புமணி பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்” என்று ராமதாஸ் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்த நிலையில், கட்சிக்குள்ளேயே நீடித்து வந்த தலைமைப் போட்டி தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. சட்டமன்றத் தேர்தலை இரு பிரிவாக எதிர்கொண்ட பா.ம.க-வில் அன்புமணி தரப்பு பா.ம.க-வில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குச் சென்றனர். இந்நிலையில், ராமதாஸ் திருமண நாளில் அவரின் இல்லத்துக்குச் சென்ற அன்புமணி, ராமதாஸுடன் பேசி மீண்டும் இணக்கமான சூழலை உருவாக்கினார்.
இதையடுத்து, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில், இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்ள போவதாகவும், இனி அரசியலில் தலையிட மாட்டேன் என்றும் தனது 88-வது பிறந்தநாள் விழாவில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பரபர அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
பொள்ளாச்சி ஜெயராமன் மகன் செய்தது திட்டமிட்ட கொலை: உயர் நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி த.வெ.க. புகழேந்தி சாடல் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ராமதாசின் பிறந்தநாளையொட்டி, பாமக தலைவரும், ராமதாசின் மகனுமான அன்புமணி ராமதாஸ், திண்டிவனத்தில் உள்ள தைலப்புரம் தோட்டத்துக்கு வருகை தந்து தந்தையை சந்தித்து ஆசி பெற்றார்.
இதன் பின்னர் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் ராமதாஸ் பேசினார். அப்போது அவர் “எனது 88வது வயதில் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். அரசியல் துறவறம் என்று சொன்னால், இன்று முதல் அரசியல் பேச மாட்டேன். அரசியலில் தலையிட மாட்டேன்.
இனி அரசியலை அன்புமணி பார்த்துக் கொள்வார். என்னை காண வரும் அனைவரையும் பார்ப்பேன். வருபவர்கள் என்னிடம் நலம் விசாரிக்கலாம். நானும் நலம் விசாரிப்பேன். அரசியல் பேச வேண்டாம். என்னை இனி தொந்தரவு செய்ய வேண்டாம்.” என்று அவர் தெரிவித்தார்.






