புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி தேர்வு..!
நீட் இளநிலைத் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு பொறுப்பேற்று, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கடந்த மாதம் 6 ஆம் தேதி முதல் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மாதத்தைக் கடந்த போராட்டத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பினரின் ஆதரவு அதிகரித்தது. இந்நிலையில், நாட்டின் சூழலைக் கருத்தில் கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்வதாக தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.
தற்போதைய சூழலை தேச விரோதிகள் தவறாகப் பயன்படுத்தி விடக்கூடாது என்பதால், தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும், மாணவர்கள் நேரத்தை வீணடிக்காமல், தங்களின் கல்வியில் கவனம் செலுத்தும் நோக்கில் இம்முடிவை எடுத்திருப்பதாகவும் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார். இளைஞர்களின் முதல் கோரிக்கை நிறைவேறியதால், டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டக்களம் கொண்டாட்ட களமாக மாறியது. அப்போது பேசிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே, இளைஞர்களுடன் மோதாதீர்கள், இதுதான் ஜனநாயகம் என்று சூளுரைத்தார்.
இதே போன்று நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கினர். இந்நிலையில், எஞ்சிய 2 கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து மத்திய அமைச்சர்கள் ஜெ.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் உடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பிரதிநிதிகள் 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பிறகு, கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நட்டா, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவதாக உறுதி அளித்தார்.
மேலும், நீட் தேர்வால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிகபட்ச இழப்பீடு தொகை வழங்குவது குறித்து பரிசீலிப்பதாகவும் குறிப்பிட்டார். இந்நிலையில், தங்களின் போராட்டத்தை முடித்து கொள்வதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் அறிவித்தனர். தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்ட நிலையில், உணவு வழங்கல் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிரகலாத் ஜோஷி, ஏற்கெனவே உணவுப்பொருள் வழங்கல் துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். கர்நாடகாவின் தார்வாட் (Dharwad) மக்களவைத் தொகுதியிலிருந்து 2004ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முறைகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் பிரகலாத் ஜோஷி. பிரதமர் நரேந்திர மோடியின் முந்தைய அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.
பிரகலாத் ஜோஷி ஏன் தேர்வு செய்யப்பட்டார்? – 2019 முதல் 2024 வரை மத்திய அரசின் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சராக இருந்த பிரகலாத் ஜோஷி பிரச்சனைகளை திறமையாக கையாளக்கூடியவர் என்கிற பெயரைப் பெற்றவர். அவரிடம் நிர்வாகத் திறனுடன் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறன் உண்டு. பிரச்சினைகளை அமைதியாக கையாளும் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர் என்பதால் பிரதமர் மோடியின் விருப்பத் தேர்வில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த அடிப்படையில் அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.






